தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க MKN மதரஸா வக்ப் நிறுவனத்தின் அறங்காவலர் நியமனத்தில் நிலவி வந்த நீண்டகால இழுபறிக்கு சென்னை உயர் நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. வாரியத்தின் தீர்மானத்தை தன்னிச்சையாக நிறுத்தி வைத்த தலைமை செயல் அதிகாரியின் (CEO) நடவடிக்கையை கண்டித்த நீதிமன்றம், புதிய அறங்காவலர் நியமனத்தை உடனடியாக உறுதி செய்ய ஆணையிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி மற்றும் CEO-வின் நடவடிக்கை
அதிராம்பட்டினம் மதரஸதுல் சலாஹிபி அத்தாரமீல் ஃபலாஹி நிறுவனத்திற்கு அறங்காவலர்களை நியமிக்க 2025 ஜூலை மாதம் வக்ப் வாரியம் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் கூறி, தலைமை செயல் அதிகாரி அந்த நியமனத்தை தடுத்து நிறுத்தி அரசுக்கு பரிந்துரை செய்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி நேற்று முக்கியத் தீர்ப்பை வழங்கினார்.
தலைமைச் செயல் அதிகாரியின் அதிகார வரம்பு
சட்டப்பிரிவு 26-ன் படி, வக்ப் வாரியத்தின் தீர்மானம் நிதி இழப்பை ஏற்படுத்தினால் மட்டுமே அதனை மறுபரிசீலனை செய்யச் சொல்ல தலைமை செயல் அதிகாரிக்கு அதிகாரம் உண்டு என்று நீதிபதி சுட்டிக்காட்டினார். வாரியம் தனது முடிவை மீண்டும் உறுதி செய்த பிறகு, அதனை அமல்படுத்துவது மட்டுமே அந்த அதிகாரியின் கடமையாகும் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
குற்றச்சாட்டுகள் குறித்த நீதிமன்றத்தின் விளக்கம்
அறங்காவலர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகள் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் தொடர்பானவை என்றும், அவை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டன என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. ஒருவர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டிருப்பதாலேயே அவர் தகுதியற்றவர் ஆகிவிட முடியாது என்றும், குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதியே என்ற மிக முக்கியமான சட்ட விதியை நீதிபதி இந்த தீர்ப்பில் பதிவு செய்துள்ளார்
நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு
தற்போது வக்ப் வாரியம் முழுமையாக செயல்படாத நிலையில் இருப்பதால், ‘அவசிய கோட்பாட்டின்’ அடிப்படையில் நீதிமன்றமே இந்த தீர்ப்பை நேரடியாக வழங்குகிறது. இதன்படி, மூன்று வாரங்களுக்குள் புதிய அறங்காவலர்களின் நியமன அறிவிப்பை தலைமைச் செயல் அதிகாரி வெளியிட வேண்டும் என்றும், அவர்களது மூன்று ஆண்டு பணிக்காலம் அந்தத் தேதியிலிருந்து கணக்கிடப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.