7,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் விற்பனைக்குத் தயாராக உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் பதிவு எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பது வருத்தமளிப்பதாக நீதிபதி பரத சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
வழக்கின் பின்னணி
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள இயக்குநர்கள், முதலீட்டாளர்களை மிரட்டுவதாக கூறி அவர்களின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அரசு தரப்பு அறிக்கை
நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் மொத்தம் ரூ. 7,000 கோடி மதிப்பிலான சொத்துகள் விற்பனைக்குத் தயாராக உள்ளதாகவும், அரசு அனுமதி பெற்ற நிலங்கள், அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலங்கள், அனுமதி பெறாத நிலங்கள், அமலாக்கத்துறை பறிமுதல் செய்த நிலங்கள் என அவை நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைனில் நிலங்களை வாங்கப் பதிவு செய்ய ரூ. 1,000 மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தின் கண்டனம்
ஆன்லைன் பதிவுகள் குறித்து மத்திய அரசு வழக்கறிஞர் அளித்த பதிலில், இதுவரை 60 முதலீட்டாளர்கள் மற்றும் 200 தனிநபர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து முறையான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவில்லை என தெரிவித்தனர். “எதையும் கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என்ற முதலீட்டாளர்களின் மனநிலை தவறான முன்னுதாரணம் எனவும் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அரசின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் சென்றடையும் வகையில் விழிப்புணர்வு பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விசாரணை ஒத்திவைப்பு
இந்த திட்டம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவே கொண்டு வரப்பட்டது என்று குறிப்பிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் மார்ச் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.