நெல்லை அருகே நடந்த கொடூரமான இரட்டை கொலை வழக்கில் உயிரிழந்த ஒடிசா மாநில தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது குறித்து விளக்கம் அளிக்கத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னணி
நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி இரவு, இருசக்கர வாகனங்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய வெறிச்செயலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாற்றுத்திறனாளியான ஜான் மார்க் (45) மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த செங்கல் சூளைத் தொழிலாளி திரிநாத் கட்டா (45) ஆகிய இருவர் இந்த படுகொலைக்கு ஆளாகினர்.
நீதிமன்றத்தில் முறையீடு
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த ஒடிசா மாநிலத் தொழிலாளர் திரிநாத் கட்டாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு இதுவரை எந்தவிதமான இழப்பீட்டு தொகையையும் வழங்கவில்லை என்பது குறித்து வழக்கறிஞர் ஆயிரம் செல்வகுமார் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அவருக்கு உரிய நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை நீதிமன்றமே தானாக முன்வந்து (Suo Motu) விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
நீதிபதிகளின் அதிரடி உத்தரவு
இந்த முறையீட்டை விசாரித்த நீதியரசர்கள் சதீஷ்குமார் மற்றும் ஜோதி ராமன் அடங்கிய அமர்வு வழங்கிய உத்தரவுகள்
புலம்பெயர்ந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசு வழக்கறிஞர் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க வேண்டும்.
மாநில அரசு இத்தகைய உயிரிழப்புகளுக்கு வழங்கும் வழக்கமான இழப்பீட்டுத் தொகையை இவருக்கும் வழங்குவது குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.