பெற்றோர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்கள், தங்களுக்கு பிறகு பிள்ளைகளுக்கு பிணக்கின்றி சேர வேண்டும் என்று விரும்புவார்கள். இதற்காக உருவாக்கப்படும் ஆவணமே உயில். ஆனால், எந்த சொத்தை உயில் எழுதலாம், எதை எழுதக்கூடாது என்பதில் பல சட்ட நுணுக்கங்கள் உள்ளன. அது குறித்து விளக்கமாக இங்கு பார்க்கலாம்.
உயில் எப்போது நடைமுறைக்கு வரும்?
சொத்தை ஒருவரது விருப்பத்திற்கு ஏற்ப, அவர் மறைவுக்குப் பிறகு யாருக்கு செல்ல வேண்டும் என்று எழுதி வைக்கும் ஆவணமே உயில் ஆகும். உயில் எழுதியவர் உயிருடன் இருக்கும் வரை அது நடைமுறைக்கு வராது. அவர் மறைந்த பிறகே அது சட்டப்படி செல்லுபடியாகும். எனவே, உயிலில் உள்ள விபரங்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம்.
உயில் எழுதும்போது கவனிக்க வேண்டியவை
- மனநிலை: உயில் எழுதுபவர் நல்ல மனநிலை கொண்டவராக இருக்க வேண்டும். மனநிலை சரியில்லாத போது எழுதப்படும் உயில் சட்டப்படி செல்லாது.
- தெளிவான விபரங்கள்: சொத்து ஒரு மாடி வீடாக இருந்து, அதை இருவருக்கு பிரிக்க வேண்டும் என்றால், “சரிபாதியாகப் பிரித்துக் கொள்ளவும்” என்று பொதுப்படையாக எழுதக்கூடாது. தரைத்தளம் யாருக்கு, முதல் தளம் யாருக்கு என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
- பெயர் விபரங்கள்: யாருடைய பெயருக்கு உயில் எழுதப்படுகிறதோ, அவரது பெயர் ஆவணங்களில் உள்ளது போலத் தெளிவாக இருக்க வேண்டும். வீட்டில் அழைக்கும் ‘செல்லப் பெயர்களை’ உயிலில் குறிப்பிடுவது பிற்காலத்தில் சட்ட சிக்கல்களை உருவாக்கும்.
எந்த சொத்தை உயில் எழுதலாம்?
ஒருவர் தனது சுயசம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தை (Self-acquired property) யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதி வைக்கலாம். அது வாரிசுகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை; நண்பர்கள், அறக்கட்டளைகள் அல்லது தங்களுக்கு பிடித்தமான யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்க முழு உரிமை உண்டு.
பூர்வீகச் சொத்துக்கு உயில் எழுதலாமா?
இதுதான் மிக முக்கியமான பகுதி. வழிவழியாக தாத்தா, தந்தை எனப் பரம்பரையாக வரும் பூர்வீக சொத்தை (Ancestral Property) எக்காரணம் கொண்டும் உயில் எழுதி வைக்க முடியாது. ஏன் செல்லாது? பூர்வீகச் சொத்தில் பிறப்பாலேயே மற்ற வாரிசுகளுக்கும் பங்கு இருப்பதால், தனிப்பட்ட முறையில் ஒருவர் அதை உயில் எழுத சட்டத்தில் இடமில்லை.
- ஒருவேளை பூர்வீகச் சொத்துக்கு உயில் எழுதப்பட்டிருந்தால், அது சட்டப்படி செல்லாததாகிவிடும்.
- அதேசமயம், பூர்விக சொத்தில் தனக்கு சொந்தமான பாகத்தினை மட்டும் ஒருவர் உயிலாக எழுத சட்டத்தில் இடமுள்ளது.
- சொந்த சம்பாத்திய சொத்திற்கு உயில் எழுதப்படவில்லை என்றால், அந்த சொத்து சட்டப்பூர்வமான வாரிசுகளுக்குச் சமமாக சென்றடையும்.
மைனர் பெயரில் உயில்
பதினாறு வயதுக்கு உட்பட்ட மைனர் பெயருக்கு சொத்தை உயில் எழுத விரும்பினால், கண்டிப்பாக ஒரு காப்பாளரை (Guardian) நியமிக்க வேண்டும். அந்த மைனர் பெரியவராகும் வரை அந்த சொத்தைச் சட்டப்படி பராமரிக்க இந்த காப்பாளர் பொறுப்பாவார்.
நன்றி
வெ.கண்ணன்
வழக்கறிஞர், மதுரை உயர்நீதிமன்றம்