முறைகேடு புகாரில் சிக்கிய முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து பல்கலைக்கழக வேந்தர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் தாக்கல் செய்த மனுவுக்கு, பல்கலைக்கழக வேந்தர், வேல்ராஜ் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது, பேராசிரியர்கள் நியமனம் செய்ததில் முறைகேடு செய்ததாக, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதன் அடிப்படையில், 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் பணி ஓய்வுபெற இருந்த வேல்ராஜை சஸ்பெண்ட் செய்து, பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர், பல்கலைக்கழக வேந்தரான கவர்னருக்கு நேரடியாக மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டின் அடிப்படையில், துணைவேந்தர் வேல்ராஜின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து 2025 செப்டம்பர் 5ஆம் தேதி பல்கலைக்கழக வேந்தர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அதன் பதிவாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை அறிக்கை அடிப்படையில், வேல்ராஜுக்கு எதிராக துறைரீதியாக நடவடிக்கை எடுக்க இருந்த நிலையில், ஆட்சி மன்ற குழு தரப்பு விளக்கத்தை கேட்காமல், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து வேந்தர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி, பல்கலைக்கழக வேந்தருக்கும், முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.