ஆள் கடத்தல் வழக்குகளைக் கையாள்வதில் நாடு முழுவதும் ஒரு சீரான, நேரத்தை மையமாகக் கொண்ட நடைமுறை வழிகாட்டுதல்களை (SOP) உருவாக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலத்தின் முக்கியத்துவம்
நீதிபதி அசானுடின் அமானுல்லா தலைமையிலான அமர்வு வழங்கிய 9 பக்க உத்தரவில், ஒரு நபர் காணாமல் போனதாகப் புகார் வந்த அடுத்த நொடியே காவல்துறை செயல்படத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. “நேரம் என்பது மிக முக்கியமானது; புகாரைப் பெற்ற உடனேயே காவல்துறை செயல்படுவதற்கான ஒரு கட்டமைப்பை இந்த வழிகாட்டுதல்கள் உருவாக்க வேண்டும்” என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கள அளவில் செயல்படுத்தக்கூடிய உத்தி
நீதிமன்றம் தனது உத்தரவில் கற்பனையான அல்லது கல்வி சார் சூத்திரங்களில் (Hypothetical/Academic Formulas) நீதிமன்றத்திற்கு விருப்பமில்லை. ஒரு சம்பவம் நடக்கும்போது அந்தப் பகுதி காவல் நிலைய மட்டத்திலேயே உடனடியாக செயல்படுத்தக்கூடிய ஒரு நடைமுறை உத்தியே தேவை. காணாமல் போன நபர் கண்டுபிடிக்கப்படும் வரை, அந்த வழக்கு காகிதத்தில் மட்டுமல்லாமல், களத்திலும் (On the ground) உண்மையாகவே தேடுதல் வேட்டையில் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
முக்கியப் பொறுப்புகள் மற்றும் குழு அமைப்பு
இந்த விவகாரத்தில் ஒரு தெளிவான திட்டத்தை உருவாக்க உச்ச நீதிமன்றம் மத்திய உள்துறைச் செயலாளர், மாநிலங்களின் உள்துறைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபி-க்கள் (DGP) அனைவரும் தங்கள் பகுதிகளில் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் அமைப்புகளுடன் ஆலோசித்து, குறிப்பிட்ட ஆலோசனைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த SOP-யை உருவாக்க ஒரு உயர்மட்டக் குழுவை நீதிமன்றம் அமைத்துள்ளது. இதில்,
- பி.எம். நாயர் (முன்னாள் NDRF டிஜிபி)
- வீரேந்திர குமார் மிஸ்ரா (உள்துறை அமைச்சக இயக்குநர்)
- எஸ்.டி. சஞ்சய் (கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்)
- எச்.எஸ். பூல்கா (மூத்த வழக்கறிஞர் – டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆள் கடத்தல் தடுப்பு SOP உருவாக்க உதவியவர்) ஆகியோர் உள்ளனர்.
அடுத்த கட்டம்
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் 21, 2026 அன்று நடைபெற உள்ளது. அன்று, மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு சமர்ப்பிக்கும் ஆலோசனைகளை நீதிமன்றம் பரிசீலிக்கும்.
SOP என்றால் என்ன?
SOP (Standard Operating Procedure) என்பது ஒரு குறிப்பிட்ட வேலையை செய்யும்போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள். ஆள் கடத்தல் வழக்குகளில் புகார் வந்த 1 மணி நேரத்தில் என்ன செய்ய வேண்டும், 24 மணி நேரத்திற்குள் எந்தெந்த மாவட்டங்களுக்கு தகவல் அனுப்ப வேண்டும் என்பது போன்ற 'Strp-by-Step' முறையை இது வகுத்துக் கொடுக்கும்.