எந்தவொரு தண்டனையையும் வெறுமனே சட்டத்தில் இருக்கிற வார்த்தைகளை மட்டும் வைத்துக் கொண்டு வழங்கக்கூடாது. சரியான காரணங்கள் இன்றியும், வழக்கின் சூழல்களை கவனத்தில் கொள்ளாமலும் ஒரு தீர்ப்பு வழங்கப்படுமானால் அது தர்மத்தை மீறிய செயலாகும் என்று பழைய நீதி நூலான “பிரிகஸ்பதிஸ்மிருதி”சொல்வதைப்போல எல்லாவற்றையும் விட தர்ம நெறியைத்தான் நம்முடைய மூதாதையர்கள் பெரிதென நம்பியிருக்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே பிரச்சினைகளை அணுகி உள்ளார்கள்.
தொடக்கத்தில் கூட்டத்தின் தலைவர்களோ, மன்னர்களோ நேரடியாக வழக்குகளை விசாரித்திருக்கிறார்கள். காலப்போக்கில் ராஜ்ஜியங்கள் விரிவடைந்தபோது கீழிருந்து வரை முறையான நீதி அமைப்புகளை உருவாக்கியிருக்கிறார்கள்.
உச்ச நீதிமன்றமாக மன்னரின் அவையே இருந்திருக்கிறது. தம்முடைய ஆட்சியில் நீதிக்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்பதில் பெரும்பாலான மன்னர்கள் ஆகப்பெரும் அக்கறைகொண்டிருந்தார்கள். அதனால்தான் எல்லாவற்றிலும் உயர்ந்தபட்ச அதிகாரத்தை ராஜாக்கள் பெற்றிருந்தாலும் நீதி வழங்குவதில் ஆலோசனை சொல்லத் தராசு முள் போன்ற சான்றோர்களைப் பக்கத்தில் வைத்திருந்தார்கள்.
அத்தகையோரைப்பார்த்துதான்,
“சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க் கணி”
என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீதிமான்களுக்கான இலக்கணத்தை நம்முடைய திருவள்ளுவர் எழுதி வைத்திருக்கிறார். திருக்குறள் என்றில்லை. பழந்தமிழரின் இலக்கியங்கள் அனைத்திலும் ஏதோ ஓர் அறம் இருந்திருக்கிறது. நீதி சொல்லப்பட்டிருக்கிறது.
பொத்தாம் பொதுவாக இத்தகைய நீதிகளைத் தாண்டி, நீதி நூல்கள் என்று தனியாகவே ஏராளமான புத்தகங்களைத் தமிழர்கள் வடித்திருக்கிறார்கள். பிறப்பு முதல் இறப்பு வரையிலான அத்தனை செயல்களுக்குமான நீதி நெறிமுறைகள் அவற்றில் வகுத்துத் தரப்பட்டுள்ளன. இவை போக நம் மண்ணில் காலந்தோறும் கடைப்பிடிக்கப்பட்ட நீதி முறைகள் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கொட்டிக்கிடக்கின்றன.
தமிழர்கள் மட்டுமின்றி இந்தியா முழுக்கவே நீதியை நிலைநாட்டுவதில் மன்னர்கள் அக்கரை, காட்டியிருக்கிறார்கள். பழங்காலத்தில் பின்பற்றப்பட்ட நீதி முறைகள் இந்தியா முழுக்க சற்றேறக் குறைய ஒரே மாதிரியாக இருந்திருக்கின்றன. பெரிய வித்தியாசங்கள் ஏதுமில்லை என்று நாடெங்கிலும் உள்ள சட்டநிபுணர்களைக் கொண்டு உச்ச நீதிமன்றம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பதே இதற்கு சான்று.
நவீன காலக்கணக்கான கி.பி.க்கு முன்பே நீதியைப் பற்றியும் அது நிலை நாட்டப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் நம் முப்பாட்டன்கள் யோசித்திருக்கிறார்கள், அதற்கான அமைப்புகளை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள்.
இன்றைக்கும் பொருத்தமான நீதி அம்சங்கள் பலவற்றை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே அவர்கள் செயல்படுத்தி இருப்பது வியப்பையும், பெருமிதத்தையும் ஒருங்கே ஏற்படுத்தக்கூடியது. சொத்துத் தகராறுகளுக்கு குற்றங்களுக்கு, வியாபாரப் பிரச்சினைகளுக்கு எனப் பலவற்றுக்கும் தீர்வு கண்டிருக்கிறார்கள். தண்டனைகளைக் கொடுத்திருக்கிறார்கள்
இதற்காக தனித்தனி நீதிமன்றங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள், தர்ம சாஸ்திரங்களை வருத்திருக்கிறார்கள்.”ஸ்மிருதி” எனப்பட்ட நியாய தர்மங்களைப் பேசும் நூல்கள், சட்டப் புத்தகங்களைப் போன்றே நடைமுறையிலிருந்தன. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இதில் ஒவ்வொரு வகையிலான நூல்கள் பின்பற்றப்பட்டன. அந்த நூல்கள் சொல்லும் தண்டனைகள் பல பிரமிக்க வைப்பவை. பாராட்டுக்குரியவை. குற்றங்கள் குறைவதற்கு இப்படி எல்லாம் இப்போதும் வைத்திருக்க வேண்டுமோ..?’ என்று யோசிக்க வைப்பவை.
அதே நேரத்தில் பல அம்சங்கள் வேடிக்கை யானவை, விநோதமானவை, அதிர்ச்சிக்குரியவை, இன்றைக்கு சும்மா நினைத்துக்கூட பார்க்காத அளவுக்கு விபரீதமானவை. அதையெல்லாம் இந்தத் தொடரில் நாம் பார்க்கப்போகிறோம்.
ராஜா காலத்தில் நீதி பரிபாலனத்திற்காக பின்பற்றப்பட்ட சட்ட நூல்களில் குறைகள் இருக்கலாம். விமர்சனங்கள் இருக்கலாம். எதில்தான் குறை இல்லை? எதன்மீதுதான் தமக்கு விமர்சனம் இல்லை’ அறிவு ஜீவிகள் கூடி உருவாக்கிய இன்றைய சட்டத்தில்கூட ஓட்டைகள் இருப்பதாக குமுறல்கள் இருக்கின்றன. அறிவியல் வெளிச்சத்தில் புதிது புதிதாக முளைக்கும் குற்றங்களுக்கும்,பிரச்சினைகளுக்கும் இதில் தீர்வு இல்லை என்று குறைபடுகிறோம்.
எனவே, மன்னராட்சி காலத்தில் வழங்கப்பட்ட நீதியை இருபத்தியோராம் நூற்றாண்டின் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு நிறுத்து, உரைத்து சரியா? தவறா? என்று பார்ப்பது சரியாக இருக்காது.
இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரிதாக மதிக்கப்பட்ட நாட்டாமைகளையும், மரத்தடி பஞ்சாயத்துகளையும் இப்போது காமெடியாக்கி வைத்திருக்கிறோம். காவல்துறை காலடி எடுத்து வைத்தாலே கௌரவக்குறைச்சல் என ஒட்டுமொத்த மக்களும் வாழ்ந்த ஊர்கள் இங்கே இருந்தன என்று சொன்னால், நம்ப முடியாத தலைமுறைகள் வந்துவிட்டன.
எல்லாமே கால மாற்றத்திற்கு உட்பட்டவை. எனவே “ராஜா காலத்து நீதி” சார்புகள் ஏதுமின்றி பழையனவற்றை அப்படியே உங்களுக்குத் தரப் போகிறது. பெருமிதங்கள் இருக்கிற இடங்களில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். குறைகளாக தோன்றுகிறபோது வருத்தப்படலாம். ஆனால், ஒன்றை மட்டும் நாம் மறக்கக்கூடாது. பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றைப் போல நீதியை நிலைநாட்டுவதிலும் நம்மவர்கள் உலக நாகரீகங்களுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறார்கள்.
(இன்னும் நீதி சொல்வோம்)
உச்ச நீதிமன்றமாக மன்னரின் அவையே இருந்திருக்கிறது. தம்முடைய ஆட்சியில் நீதிக்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்பதில் பெரும்பாலான மன்னர்கள் ஆகப்பெரும் அக்கறைகொண்டிருந்தார்கள்”.