தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
பார் கவுன்சில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக உச்ச நீதிமன்றத்தால் ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ராஜீவ் சக்தேர் தலைமையில் உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டது. பார் கவுன்சில் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 30ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர்கள் ஓம் பிரகாஷ், அமீத் ஜார்ஜ் ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
மொத்தம் உள்ள 25 உறுப்பினர்களில் 7 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களில் 5 பேர் தேர்தல் முறையிலும் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், 2 பேர் இந்திய பார் கவுன்சில் மூலமாக நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் அதிகாரியாக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷாவை நியமித்து, உயர் மட்டக் குழு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.