அரசு பெண் அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், வெறும் வாக்குவாதம் செய்ததற்காக ஒருவரைத் தண்டிக்க முடியாது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
வழக்கின் பின்னணி
சிவகங்கை பாஜக நகரத் தலைவராக இருக்கும் உதயா, காரில் சென்றபோது சீட் பெல்ட் அணியாதது குறித்து போக்குவரத்து சார்பு ஆய்வாளர் அழகுராணி கேள்வி எழுப்பியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கார் நம்பர் பிளேட் விவகாரத்தில் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தன்னைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாக வீடியோ ஆதாரத்துடன் சார்பு ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் உதயா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றத்தின் முக்கிய அவதானிப்புகள்
இந்த மனுவை விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி, புகாரில் உதயகுமார் எந்த குறிப்பிட்ட ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்பது தெளிவாகக் கூறப்படவில்லை. வெறும் “தகாத வார்த்தை” எனக் குறிப்பிடுவது மட்டும் ஒருவரைத் தண்டிக்கப் போதுமானது அல்ல என தெரிவித்தார்
உதயகுமார் அதிகாரியைத் தாக்கியதற்கும், வன்முறையை கையாண்டதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. சத்தமாகப் பேசுவதோ அல்லது வாக்குவாதம் செய்வதோ “வன்முறை” என்ற பிரிவின் கீழ் வராது என நீதிபதி விளக்கம் அளித்தார்.
அரசு ஊழியர்கள், குறிப்பாகப் பெண் போலீசாரைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றாலும், தனிப்பட்ட உணர்வுகளுக்காக ஒருவரைத் தண்டிக்க முடியாது. சட்டம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே வழக்கு அமைய வேண்டும் எனவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு
தனிப்பட்ட மோதல்களை சட்ட ரீதியிலான குற்றமாக மாற்ற முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதி, பாஜக பிரமுகர் உதயா மீதான அனைத்துப் பிரிவுகளின் கீழான வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் (Sec 353 IPC) என்றால் என்ன?
ஒரு அரசு ஊழியர் தனது கடமையை செய்யும்போது, அவரை உடல் ரீதியாக தாக்குவது அல்லது வன்முறை மூலம் தடுப்பது மட்டுமே இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகும். ஒரு சட்ட விவகாரம் குறித்து அதிகாரியிடம் சத்தமாக வாதிடுவது அல்லது கேள்வி கேட்பது என்பது “பணி செய்ய விடாமல் தடுத்தல்” ஆகாது என்பதை நீதிமன்றம் இத்தீர்ப்பின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.