சி.ஆர்.பி.எஃப் (CRPF), பி.எஸ்.எஃப் (BSF) போன்ற படைகளின் உயர் பதவிகளை ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சட்டப்பூர்வமாக உறுதி செய்யும் வகையில் இந்த புதிய மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மசோதாவின் முக்கிய அம்சங்கள்
இந்த மசோதாவின்படி, மத்திய ஆயுதக் காவல் படைகளின் மொத்த பணியிடங்களில் ஐஜி-க்கு (Inspector General) 50% ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும், ஏடிஜி-களுக்கு (Additional Director General) 67% பணியிடங்கள் ஐபிஎஸ் அதிகாரிகளால் நிரப்பப்படும். மேலும், இயக்குநர் ஜெனரல் மற்றும் சிறப்பு இயக்குநர் ஜெனரல் ஆகிய அனைத்து உயர் பதவிகளும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மட்டுமே சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட உள்ளது.
மத்திய அரசின் விளக்கம்
இதுவரை இத்தகைய நியமனங்கள் நிர்வாக உத்தரவுகளின் (Executive Orders) மூலமே நடைபெற்று வந்தன. தற்போது இதனைச் சட்டமாக்குவதன் மூலம் பதவி உயர்வு தொடர்பான தேவையற்ற நீதிமன்ற வழக்குகளைக் குறைக்க முடியும் என உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.
மாநில காவல்துறையுடன் சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணவும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஐபிஎஸ் அதிகாரிகளின் அனுபவம் அவசியம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
வழக்கின் பின்னணி
இந்த மசோதாவுக்குப் படையில் உள்ள நேரடி அதிகாரிகள் (Cadre Officers) கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், ஒரு உதவி கமாண்டன்ட் (Assistant Commandant) தனது முதல் பதவி உயர்வைப் பெறவே 15-18 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ள நிலையில், இந்த மசோதா அவர்களின் வளர்ச்சியை மேலும் முடக்கும் என வாதிடுகின்றனர்.
கடந்த மே 23, 2025 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சி.ஏ.பி.எஃப் படைகளில் ஐபிஎஸ் அதிகாரிகளின் நியமனத்தைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இந்த மசோதா அந்தத் தீர்ப்பின் நோக்கத்திற்கு எதிராக இருப்பதாக ஓய்வுபெற்ற அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கேடர் அதிகாரிகள் vs ஐபிஎஸ் – விளக்கம்!
மத்திய ஆயுதக் காவல் படைகளில் நேரடியாகப் பணியில் சேரும் அதிகாரிகளை ‘கேடர் அதிகாரிகள்’ என்பர். இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அந்தப் படையிலேயே செலவிடுகின்றனர். மறுபுறம், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநில காவல்துறையிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இப்படைக்கு அயல் பணியில் (Deputation) வருவார்கள். தற்போது உயர் பதவிகள் அனைத்தும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கே செல்வதால், பல தசாப்தங்களாகப் பணியாற்றும் கேடர் அதிகாரிகளுக்குத் தகுதியான பதவி உயர்வு கிடைப்பதில்லை என்பதே இந்த நீண்டகாலப் போராட்டத்தின் அடிப்படை.