செங்கல்பட்டில் 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சிறுமியின் கல்வி மற்றும் பாதுகாப்பு கருதி விசாரணையை செங்கல்பட்டிலிருந்து சென்னைக்கு மாற்றக் கோரி அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு குறித்துக் குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
கடந்த 2024-ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் பக்கத்து வீட்டு சிறுவன் அத்துமீறியுள்ளான். பின்னர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளான்.
2025-ஆம் ஆண்டு சிறுமி 7 மாத கர்ப்பமாக இருந்தபோதுதான் இந்த விவகாரம் பெற்றோருக்குத் தெரியவந்தது. இதனையடுத்து தந்தை அளித்த புகாரின் பேரில், ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு, 6 சிறார்கள் உட்பட 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் தந்தையின் கோரிக்கை
தற்போது செங்கல்பட்டு சிறார் நீதிமன்றம் மற்றும் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கை சென்னைக்கு மாற்றக் கோரி சிறுமையின் தந்தை மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது சென்னையில் படித்து வருவதாகவும். செங்கல்பட்டு சென்று வருவது அவளது படிப்பிற்குப் பெரிய இடையூறாக இருக்கும். செங்கல்பட்டில் சாட்சியம் அளிப்பதற்கான சாதகமான சூழல் குறைவாக உள்ளது. சென்னைக்கு மாற்றினால் சிறுமி எவ்விதச் சிரமமும் பயமும் இன்றி சாட்சி அளிக்க வசதியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு
இந்த மனு நீதிபதி எம். நிர்மல்குமார் முன்னிலையில் இன்று (மார்ச் 25, 2026) விசாரணைக்கு வந்தது. வழக்கை இடமாற்றம் செய்வது குறித்துக் குற்றம் சாட்டப்பட்ட 6 சிறார்கள் மற்றும் 9 இளைஞர்கள் என மொத்தம் 15 பேரும் தங்கள் தரப்பு விளக்கத்தைப் பதில் மனுவாகத் தாக்கல் செய்ய வேண்டும். அனைத்துத் தரப்பு பதில்களையும் பரிசீலிப்பதற்காக இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நீதிபதி வரும் ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
வழக்கு இடமாற்றம் (Transfer of Case) ஏன்?
சாதாரணமாக ஒரு குற்றம் எங்கு நடந்ததோ அந்தப் பகுதி நீதிமன்றத்தில்தான் வழக்கு நடைபெறும். ஆனால், பாதிக்கப்பட்டவர் ஒரு குழந்தையாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கும்போது, அவர்களுக்கு அந்த இடத்தில் அச்சுறுத்தல் இருந்தாலோ அல்லது சாட்சி சொல்ல வருவதில் நடைமுறைச் சிக்கல்கள் (படிப்பு, தூரம்) இருந்தாலோ, நலன் கருதி வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.