தனித் தொகுதிகளில் இந்து, சீக்கியம் மற்றும் பௌத்த மதங்களை தவிர பிற மதங்களுக்கு மாறியவர்கள் போட்டியிடத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தைப் பெற்ற நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
தேர்தல் ஆணையத்தின் விளக்கம்
நீதிமன்றத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள பட்டியல் இனத்தவர் (SC) சான்றிதழ் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை மட்டுமே ஆய்வு செய்யத் தேர்தல் அதிகாரிகளுக்கு (Returning Officers) சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ஒரு வேட்பாளரின் சாதிச் சான்றிதழ் செல்லாது அல்லது தவறானது என்று கண்டறியப்பட்டால் மட்டுமே அவரது வேட்புமனு நிராகரிக்கப்படும். மதம் குறித்த புகார்களைப் பொறுத்தவரை, சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலேயே முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பு வாதம்
அர்ஜுன் சம்பத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேட்புமனுக்களைப் பரிசீலனை செய்ய இன்று ஒருநாள் மட்டுமே கால அவகாசம் உள்ளது. எனவே, மதம் மாறியவர்கள் குறித்த புகார்களை அதிகாரிகள் இப்போதே தீவிரமாக ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்
தலைமை நீதிபதி அமர்வின் உத்தரவு
தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு இந்த விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். இன்று நடைபெற்று வரும் வேட்புமனு பரிசீலனைக்கு (Scrutiny) நீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை” என நீதிபதிகள் வாய்மொழியாகத் தெரிவித்தனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நாளை மறுநாளுக்கு (ஏப்ரல் 9, 2026) தள்ளிவைக்கப்பட்டது.
தடை விதித்தால் என்னவாகும்?
நீதிமன்றம் வேட்புமனு பரிசீலனைக்குத் தடை விதிக்காததால், இன்று திட்டமிட்டபடி அனைத்துத் தொகுதிகளிலும் மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும், மதம் மாறியவர்கள் குறித்த புகார்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் தகுதி குறித்துத் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க நீதிமன்றம் வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.