சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த வி.செந்தில்பாலாஜி கடந்த 2011-2015ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளதாகவும், அதில் கிடைத்த பணத்தின் மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டதாக கூறி செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு கைது செய்தது. கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில்பாலாஜியை கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

பின்னர் இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், சண்முகம், கார்த்திகேயன், கணேசன், வெற்றிச்செல்வன், அருண் ரவீந்திரா டேனியல், ஆல்பட் தினகரன், ஜெயராஜ் குமார், பழனி,லோகநாதன்,பிரபு,அனுராத ரமேஷ் ஆகியோரும் சேர்க்கப்பட்டு அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான அமலாக்கத்துறை தொடர்ந்த இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்ததபோது செந்தில் பாலாஜி இன்று நேரில் ஆஜராகவில்லை. அவரின் சகோதரர் அசோக் குமார் நேரில் ஆஜராகி, வரும் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் மார்ச் 2 ஆம் தேதி வரை துபாய் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை ஏற்று, வெளிநாடு செல்ல அனுமதி வழங்கிய நீதிபதி கார்த்திகேயன், அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை மார்ச் 3 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.