வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்குகளில் கைது நடவடிக்கை எடுப்பது குறித்து, ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பில் மாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
பிரிவு 498-A மற்றும் புகார்கள்
திருமணமான பெண்களுக்குப் புகுந்த வீட்டில் கணவன், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களால் வரதட்சணை கொடுமை ஏற்படும்போது, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498-A-ன்கீழ் புகார் அளிக்க முடியும். இந்தப் பிரிவின் கீழ் புகார் வரும்போது கணவன் மற்றும் அவரது உறவினர்களை உடனடியாகக் கைது செய்வது வழக்கமாக இருந்தது. இருப்பினும், இதில் பொய் புகார்கள் அளிக்கப்படுவதாகவும், கணவன் வீட்டார் வீணாகப் பழிவாங்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
முந்தைய தீர்ப்பு (2017)
இது தொடர்பாக ராஜேஷ் சர்மா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல் மற்றும் யு.யு.லலித் அமர்வு, கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி ஒரு தீர்ப்பு வழங்கியது. அதில்
- வரதட்சணை புகார்கள் வரும்போது கணவன் மற்றும் அவரது பெற்றோரைத் தன்னிச்சையாகக் கைது செய்யக் கூடாது.
- அனைத்து மாவட்டங்களிலும் ‘குடும்ப நல கமிட்டி’ அமைக்கப்பட வேண்டும். அந்தக்குழு விசாரித்து அறிக்கை அளிக்கும் வரை கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது.
- வெளிநாடுகளில் இருக்கும் கணவன் வீட்டாரின் பாஸ்போர்ட்டை முடக்க இயந்திரத்தனமாக ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ அனுப்பக் கூடாது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
பெண்கள் அமைப்புகளின் எதிர்ப்பு
இந்தத் தீர்ப்பு பெண்கள் அமைப்புகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இது பின்னடைவாக அமையும் எனக்கூறி, ‘நியாயதார்’ உள்ளிட்ட 16 பெண்கள் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மறுபரிசீலனை மனுக்களைத் தாக்கல் செய்தன.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் புதிய உத்தரவு
மனுக்களை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, பழைய தீர்ப்பில் முக்கிய மாற்றங்களைச் செய்து புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது
- குடும்ப நல கமிட்டி ரத்து: மாவட்டந்தோறும் குடும்ப நல கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
- கைது நடவடிக்கைக்குத் தடையில்லை: கமிட்டி அறிக்கை அளிக்கும் வரை கைது செய்யக் கூடாது என்ற நிபந்தனை நீக்கப்படுகிறது. சட்டத்தில் உள்ள இடைவெளியை நீதிமன்றங்கள் தானாக நிரப்ப முடியாது என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
- சமரசம் மற்றும் வழக்கு ரத்து: வழக்கில் இரு தரப்பிற்கும் இடையே சமரசம் ஏற்பட்டால், உயர் நீதிமன்றத்தை அணுகி வழக்கைத் தள்ளுபடி செய்து கொள்ளலாம்.
- நீடிக்கும் உத்தரவுகள்: நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்தாமல் ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் விசாரிக்கலாம் என்பதும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இயந்திரத்தனமாக ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ அனுப்பக் கூடாது என்பதுமான உத்தரவுகள் மட்டும் தொடர்ந்து நீடிக்கும்.
நன்றி
வெ.கண்ணன்
வழக்கறிஞர், மதுரை உயர்நீதிமன்றம்