பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து அன்புமணி ராமதாசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை நிறுவனர் ராமதாஸ் வாபஸ் பெற்றார்.

பா.ம.க. கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதாக, தேர்தல் ஆணையம், அன்புமணி முகவரிக்கு கடந்த 2025 ஜூலை மாதம் கடிதம் அனுப்பியிருந்தது.
இந்த கடிதத்தை ரத்து செய்து, தனது முகவரிக்கு கடிதம் அனுப்ப உத்தரவிடக் கோரி கட்சி நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் பிப்ரவரி 2ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, டாக்டர் ராமதாஸ் தரப்பில் கட்சியின் உறுப்பினராக இல்லாத முன்னாள் தலைவர் அன்புமணி ராமதாஸ் முகவரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளதால், அந்த கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் தரப்பில், கட்சி தன் வசம் தான் உள்ளது என்றும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், தன்னை இந்த வழக்கில் இணைக்க கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், டாக்டர் ராமதாஸ் மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்திருந்தனர்.
இந்த நிலையில், இதே விவகாரம் தொடர்பாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தை அணுகியுள்ளதால், இந்த வழக்கை வாபஸ் பெற அனுமதிக்கக் கோரி ராமதாஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
அதன்படி, தலைமை நீதிபதி அமர்வில் அந்த வழக்கு இன்று பட்டியலிடப்பட்டு, விசாரணைக்கு வந்தபோது, மனுவை வாபஸ் பெற அனுமதித்த நீதிபதிகள், டாக்டர் ராமதாசின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.