தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்று வாக்களிக்கும் வகையில், நிரந்தரமான சாய்தள (Ramp) வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
மாற்றுத்திறனாளிகள் உரிமை ஆர்வலர் வைஷ்ணவி ஜெயகுமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில்
- மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016-ன் படி, அனைத்து வாக்குச்சாவடிகளும் தடையற்ற அணுகல் வசதியுடன் (Universal Accessibility) இருக்க வேண்டும்.
- பல வாக்குச்சாவடிகளில் முறையான சாய்தளங்கள் இல்லை; சில இடங்களில் தற்காலிகமாக வைக்கப்படும் மரப் பலகைகள் பாதுகாப்பற்றதாக உள்ளன.
- தேர்தல் ஆணையத்தின் இணையதளமும் மாற்றுத்திறனாளிகள் (பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்கள் உள்ளிட்டோர்) எளிதாகப் பயன்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் விளக்கம்
தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை உறுதி செய்ய ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்தளங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சக்கரம் நாற்காலி (Wheelchair), தன்னார்வலர்கள் உதவி மற்றும் தரைதளத்திலேயே வாக்குச்சாவடி அமைத்தல் போன்ற ‘உறுதி அளிக்கப்பட்ட குறைந்தபட்ச வசதிகள்’ (Assured Minimum Facilities) செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தனர்.
நீதிமன்றத்தின் உத்தரவு
தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தைக் கேட்ட நீதிபதிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் தற்காலிகமாக மரப் பலகைகளை அடுக்கிச் சாய்தளம் அமைப்பதைப் ஏற்க முடியாது. பொதுக் கட்டிடங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நிரந்தரமான கான்கிரீட் சாய்தளங்கள் (1:12 சரிவு விகிதத்தில்) இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதுவரை எத்தனை வாக்குச்சாவடிகளில் நிரந்தர வசதிகள் செய்யப்பட்டுள்ளன, செய்யப்படாத இடங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முழுமையான விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.