மனைவியின் தனிப்பட்ட விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், குழந்தைகளின் நலன் கருதி அவர்களைக் கீழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.
வழக்கின் பின்னணி
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் தனது மனைவி இரண்டு குழந்தைகளுடன் மார்ச் 7, 2026 அன்று மாயமாகிவிட்டார். இது குறித்து ஊத்துமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாயமான தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
நீதிபதிகளின் சட்ட விளக்கம்
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் நீதிபதி தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுதாரரின் மனைவி தனது விருப்பப்படி வேறொரு நபருடன் செல்லத் தேர்வு செய்துள்ளார். அவர் சட்டவிரோதக் காவலில் வைக்கப்படவில்லை என்பதால், இத்தகைய ஆட்கொணர்வு வழக்கில் நீதிமன்றம் எதுவும் செய்ய இயலாது. எனவே மனைவி தொடர்பான விவகாரங்களில் மனுதாரர் உரிய குடும்ப நல நீதிமன்றத்தை (Family Court) நாடித் தீர்வு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
இருப்பினும், மனைவியின் முடிவில் தலையிட முடியாவிட்டாலும், அழைத்து செல்லப்பட்ட 2 குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து நீதிமன்றம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக குறிப்பிட்டனர்.
நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மனுதாரரின் மனைவி மற்றும் 2 குழந்தைகள் ஆகிய மூவரையும் உடனடியாகத் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகளை ஊத்துமலை காவல் ஆய்வாளர் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு, இந்த ஆட்கொணர்வு மனுவை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
ஆட்கொணர்வு மனு (Habeas Corpus) என்றால் என்ன?
ஒருவர் யாராலாவது கடத்தப்பட்டுச் சட்டவிரோதக் காவலில் (Illegal Detention) வைக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஆட்கொணர்வு மனு செல்லுபடியாகும். ஒரு நபர் தனது சுய விருப்பத்தின் பேரில் வீட்டை விட்டுச் சென்றாலோ அல்லது வேறொருவருடன் சென்றாலோ, அது சட்டவிரோதக் காவல் ஆகாது. ஆனால், மைனர் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்போது நீதிமன்றம் அதில் தலையிட அதிகாரம் பெற்றுள்ளது.