மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “கோமதி என்பவர் கடந்த 2013ஆம் ஆண்டு இளநிலை எழுத்தர் ஆக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் சிலருடன் கூட்டு சேர்ந்து செல்வாக்கு மிக்க நபராக மாறி, தற்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். அவர் மீது சட்டவிரோதமாக சான்றிதழ்கள் வழங்கியது, பல்கலைக்கழக ஆவணங்களை வெளியிட்டது, ஆய்வு மற்றும் இணைப்பு வழங்குவதில் லஞ்சம் பெற்றது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இருந்தும் அவர் மீது பல்கலைக்கழக நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. தண்டனை என்ற பெயரில் வேறு துறைக்கு மாற்றப்பட்டார். வண்டியூரில் 2 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியுள்ளார். ஊழியர்களுக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இது அரசு சேவை விதிகளுக்கு முரணானது” என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடந்த ஆண்டு நான் புகார் அளித்தேன். எவ்வித பதிலும் இல்லாத நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது, அந்த புகார் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டதாக பதிலளிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் எனது புகாரில் முகாந்திரம் இல்லை எனக் கூறி வழக்கு முடித்ததாக தெரிவிக்கப்பட்டது. இது சரியானது அல்ல எனவே மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை உதவியுடன் நியாயமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, ” அரசுப் பணியாற்றும் நபர் மீது புகார் எழுகையில் முறையாக அனுமதிபெற்று, அது தொடர்பான விசாரணையை செய்ய வேண்டும். யார் புகார் அளித்தார்? என்பது தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டிய தேவையில்லை. பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் தரப்பில், கோமதி மீதான குற்றச்சாட்டுக்கு மாகாந்திரம் இல்லை எனக் கூறி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை அமைப்பாக செயல்படாமல், தபால் நிலையமாக மட்டும் இந்த விஷயத்தில் செயல்பட்டு புகாரை அப்படியே பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியுள்ளது” என அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மேலும், விபரங்களை சரிபார்ப்பது எனில் ஊழியரின் பதிலை கேட்பது மட்டுமல்ல, விசாரணை அதிகாரி வேறு இடங்களிலிருந்தும், விபரங்களைப் பெற்று விசாரித்திருக்க வேண்டும் என்றும், பல்கலைக்கழகங்களில் ஊழல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அது எதிர்கால சந்ததியினரையும் பாழாக்குகிறது என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத் துறை போன்ற விசாரணை அமைப்புகள், தங்கள் கடமையை பணியை முறையாகச் செய்யாத போது, வேறு அமைப்புக்கு மாற்றுவது தேவையாகிறது என்று குறிப்பிட்ட நிதிபதிகள், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்த புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.