கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் சந்தன மரக் கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் 9 பேரை விடுதலை செய்து கோபிச்செட்டிபாளையம் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்கங்களின் எல்லையில் உள்ள தொட்டகஜனூர் பகுதியில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் இருந்து கன்னட நடிகர் ராஜ்குமார், சந்தன மரக் கடத்தல் வீரப்பன் தலைமையிலான குழுவினரால் கடத்தப்பட்டார். அவருடன் மேலும் மூன்று பேரும் கடத்திச் செல்லப்பட்டனர்.

108 நாட்களுக்குப் பின், இரு மாநில அரசுகளின் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நவம்பர் 15ஆம் தேதி ராஜ்குமார் விடுவிக்கப்பட்டார்.

இந்த கடத்தல் தொடர்பாக வீரப்பன், சந்தன கவுடா, மல்லு, சேத்துக்குளி கோவிந்தன், மாறன், கோவிந்தராஜ், அன்றில், செல்வம், அமிர்தலிங்கம், பசுவண்ணா, நாகராஜ், பொட்டுசாமி, ராமா ஆகிய 14 பேர் மீது தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், 2004ஆம் ஆண்டு வீரப்பன், அவருடைய கூட்டாளிகள் சந்தன கவுடா, மல்லு, சேத்துக்குளி கோவிந்தன் ஆகியோர் தர்மபுரி அருகே அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மீதமுள்ள ஒன்பது பேர் மீதான வழக்கை விசாரித்த கோபிச்செட்டிபாளையம் நீதிமன்றம், முக்கிய சாட்சிகளான ராஜ்குமார், அவரது மனைவி பர்வதம்மாவிடம் விசாரணை நடத்தவில்லை எனவும் பிணைத் தொகை கேட்கும் ஆடியோ கேசட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என கூறி, ஒன்பது பேரையும் விடுதலை செய்து 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2019ஆம் ஆண்டு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் எம்.ஜோதிராமன் ஆகியோர் பிறப்பித்துள்ள தீர்ப்பில், காவல் துறை மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து, வீரப்பனின் கூட்டாளிகள் 9 பேரையும் விடுதலை செய்த கோபிச்செட்டிபாளையம் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.