சென்னை திருநீர்மலை பெருமாள் கோவில் குளம் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றம் உறுதியளித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பல்லாவரம் அருகே இருக்கும் திருநீர்மலையில் அமைந்துள்ள மிக பழமையான ரங்கநாத பெருமாள் கோவில் என அழைக்கப்படும் நீர்வண்ணப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலின் குளத்தில் பிரமோத்சவம், தீர்த்தவாரி உள்ளிட்ட பல்வேறு பூஜை, சடங்குகள் நடைபெறும் நிலையில், அது முறையாக தூர்வாரப்படாமல், குப்பைகள் நிறைந்து காணப்படுவதாகவும், கோயில் குளத்தை சரி செய்யுமாறு இந்து சமய அறநிலைய துறைக்கும், கோயில் நிர்வாகத்திற்கும் உத்தரவிட வேண்டும் என்று பி. பாலாஜி என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரர் தரப்பில் கோவில் குளத்தை சீர்செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி குளத்தின் தற்போதைய நிலை குறித்த புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் கோயில் நிர்வாகம் தரப்பில், குளத்தை தூர்வாரும் பணிக்கு டெண்டர் கோரப்பட்ட நிலையில் டாக்டர் அசோகன் என்பவர் ரூ.63 லட்சம் செலவில் பணிகளை தானே செய்து தருவதாக தெரிவித்திருப்பதாகவும், அதன்படி தூர்வாரி சீரமைக்கும் பணிகள் ஜனவரி 7ஆம் தேதியே தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், பிப்ரவரி 12ஆம் தேதி நிலவரப்படி 50 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டதால், அனைத்து பணிகளும் ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடைந்துவிடும் என்று உறுதியளிக்கப்பட்டது.
கோவில் செயல் அலுவலர் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், குளத்தை சீர் செய்யும் பணியை 3 மாதத்தில் முடிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.