திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட முன்னாள் ஆட்சியர் வெங்கடாசலம் மீது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் பல்வேறு புகார்கள் நிலுவையில் உள்ள நிலையில், அவருக்கு ‘தன்னார்வ விருப்ப ஓய்வு’ வழங்கப்பட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கின் பின்னணி
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல கிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் வெங்கடாசலம் ஆட்சியராக இருந்தபோது, தனது மனைவி பெயரில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை மிகக்குறைந்த விலைக்கு வாங்கியதாகக் காட்டி, முத்திரைக் கட்டணத்தைத் தட்டிக்கழித்துள்ளார். இவரது அதிகாரப்பூர்வ வருமானம் ₹60 லட்சம் மட்டுமே. ஆனால், இவர் சுமார் ₹10 கோடி மதிப்பிலான சொத்துக்களை வாங்கியுள்ளார். ₹3 கோடி செலவில் சொகுசு பங்களாவைக் கட்டியுள்ளார். இவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாக குறிப்பிட்டுள்ளார்.
‘தன்னார்வ ஓய்வு’ சர்ச்சையும் சட்டமீறலும்
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மகேஸ்வரன் ஒரு அரசு அதிகாரி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நிலுவையில் இருக்கும்போது, அந்தத் துறையின் ‘தடை இல்லா சான்று’ இல்லாமல் அவருக்கு விருப்ப ஓய்வு வழங்க முடியாது. ஆனால், வெங்கடாசலத்திற்கு விதிமுறைகளை மீறி தன்னார்வ ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் மீதான சட்ட நடவடிக்கைகளிலிருந்து அவர் தப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நீதிபதியின் கண்டனம்
இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, வெங்கடாசலத்தின் மீது இவ்வளவு கடுமையான புகார்கள் நிலுவையில் இருக்கும்போது, அவருக்கு விருப்ப ஓய்வு வழங்க அனுமதி அளித்த அதிகாரிகள் யார்? இந்த விவகாரம் குறித்துத் தமிழக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விரிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 7, 2026-க்கு ஒத்திவைத்தார்.
விருப்ப ஓய்வு (VRS) பெற்றால் வழக்குகள் ரத்தாகுமா?
சாதாரணமாக ஒரு அரசு ஊழியர் ஓய்வு பெற்றுவிட்டால், அவர் மீதான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் சில சமயங்களில் முடிவுக்கு வரலாம். ஆனால், வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தல் என்பது ஒரு கிரிமினல் குற்றமாகும். அவர் பணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை அல்லது சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்த முடியும். இந்த வழக்கில், அவர் ஓய்வு பெற்றதை ரத்து செய்யக் கோருவதன் நோக்கம், அவர் அரசு ஊழியர்களுக்குரிய ஓய்வூதியப் பலன்களைப் பெறுவதைத் தடுப்பதும், விசாரணையை முடுக்கி விடுவதும் ஆகும்.