நீதிமன்றம் ஒரு நபர் அல்லது ஒரு தரப்பினரை நோக்கி, ஒரு குறிப்பிட்ட செயலை செய்யும்படியோ அல்லது செய்யக்கூடாது என தடுத்தோ பிறப்பிக்கும் உத்தரவே உறுத்துக்கட்டளை ஆகும். இது சிவில் வழக்குகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிவாரணமாகும்.
உறுத்துக்கட்டளையின் வகைகள்
சட்ட ரீதியாக உறுத்துக்கட்டளைகள் நான்கு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன
- இடைக்கால உறுத்துக்கட்டளை (Temporary Injunction): வழக்கு நிலுவையில் இருக்கும்போது, நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை தற்காலிகமாக பிறப்பிக்கப்படும் தடை.
- செயலுறுத்து கட்டளை (Mandatory Injunction): ஒரு குறிப்பிட்ட செயலை ஒருவர் கட்டாயம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் இடும் உத்தரவு.
- நிலைக்கால உறுத்துக்கட்டளை (Perpetual Injunction): வழக்கின் இறுதி தீர்ப்பின் போது, ஒரு செயலை நிரந்தரமாக தடுத்து வழங்கப்படும் உத்தரவு.
- தடை உறுத்துக்கட்டளை (Prohibitory Injunction): ஒரு செயலை ஒருவர் செய்யக்கூடாது என்று தடுத்து நிறுத்தப் பிறப்பிக்கப்படும் உத்தரவு.
உறுத்துக்கட்டளை பெறுவதற்கான தகுதிகள்
ஒருவர் நீதிமன்றத்தில் உறுத்துக்கட்டளை பெறுவதற்கு:
அவர் தாக்கல் செய்த வழக்கோ அல்லது அவர் மீது தொடரப்பட்ட வழக்கோ நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்க வேண்டும்.
அந்த வழக்கில் உரிய நியாயமான காரணங்கள் (Prima Facie case) இருக்க வேண்டும்.
எந்தச் சூழ்நிலைகளில் உறுத்துக்கட்டளை பெற முடியாது?
- சில குறிப்பிட்ட நேரங்களில் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்காது:
- நீதிமன்றத்தில் வழக்கு எதுவும் தாக்கல் செய்யப்படாமல் இருந்தாலோ அல்லது வழக்கு முடிவடைந்து விட்டாலோ பெற முடியாது.
- வழக்கை விசாரிக்கநீதிமன்றத்திற்கு உரிய அதிகாரம் (Jurisdiction) இல்லாதபோது.
- பாகப்பிரிவினை தொடர்பான வழக்குகளில் பொதுவான தடையுத்தரவு பெறுவதில் சிக்கல்கள் உண்டு.
- ஒரு நிர்வாகம் (Management) தனதுபணியாளருக்கு எதிராக எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு எதிராகப் பெற முடியாது.
- வழக்கு முறையாகத் தாக்கல் செய்யப்படாத போது.
நடைமுறை மற்றும் காலாவதி
- நடைமுறை: உறுத்துக்கட்டளை குறித்த விபரம் எப்போது எதிர்தரப்பினருக்கு தெரியப்படுத்தப்படுகிறதோ (Notice), அன்று முதலே அது நடைமுறைக்கு வரும்.
- காலாவதி: ஒரு வழக்கில் வழங்கப்பட்ட இடைக்கால உறுத்துக்கட்டளை, அந்த வழக்கு முடிவுக்கு வரும்போது தானாகவே முடிந்துவிடும்.
- மறுசீரமைப்பு: வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டால், அதனுடன் உறுத்துக்கட்டளையும் தள்ளுபடியாகிவிடும். அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டால், உறுத்துக்கட்டளை தானாக வராது; அதை மீண்டும் கோர வேண்டும்.
மீறினால் வரும் விளைவுகள்
நீதிமன்றத்தின் உறுத்துக்கட்டளையை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். எதிர்தரப்பினர் உத்தரவை மீறினால், அதைப் பெற்றவர் நீதிமன்றத்தில் புகார் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் நீதிமன்றம் சிவில் சிறை தண்டனையோ அல்லது சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையோ எடுக்க அதிகாரம் கொண்டுள்ளது.
நன்றி
வெ.கண்ணன்
வழக்கறிஞர், மதுரை உயர்நீதிமன்றம்