சென்னையில் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிய மாற்றுத்திறனாளிகளைக் காவல்துறை தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த சம்பவம் மிகவும் தீவிரமானது எனக் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்துக் காவல்துறை விரிவான பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கின் பின்னணி
‘தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின்’ மாநில பொதுச் செயலாளர் பா. ஜான்சிராணி தாக்கல் செய்த மனுவில் கடந்த பிப்ரவரி 17, 2026 அன்று, தமிழகம் முழுவதிலிருந்து சுமார் 1,800 மாற்றுத்திறனாளிகள் சென்னை சேப்பாக்கம் சிவானந்த சாலையில் திரண்டு தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடினர். போராட்டக்காரர்களைத் திருமண மண்டபத்தில் தங்க வைப்பதாகக் கூறி 20-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர்.
சித்ரவதை மற்றும் தாக்குதல்
எழும்பூர் உதவி ஆணையர் ஜெகதீசன் மற்றும் ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான போலீசார், பேருந்துகளில் ஏற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யாமல் அலைக்கழித்துள்ளனர். மனுதாரர் ஜான்சிராணியைப் பேருந்தில் வலுக்கட்டாயமாகத் தூக்கிப் போட்டு, கைகளை முறுக்கியதில் அவர் மயக்கமடைந்துள்ளார். இருப்பினும், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் போலீசார் சித்ரவதை செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இழப்பீடு மற்றும் பணியிடை நீக்கம்
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக ₹25 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும். தாக்குதல் நடத்திய எழும்பூர் உதவி ஆணையர் ஜெகதீசன் மற்றும் ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோரைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.
நீதிபதி வழங்கிய உத்தரவு
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம். நிர்மல்குமார் மாற்றுத்திறனாளிகள் மீதான இத்தகைய புகார்கள் மற்றும் காவல்துறை மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. இது குறித்துச் சென்னை காவல்துறை தரப்பில் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 21, 2026-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் அறிவோம்!
இந்தியச் சட்டப்படி, மாற்றுத்திறனாளிகளைப் பாதுகாப்பதற்கெனத் தனிச் சட்டம் (RPwD Act, 2016) உள்ளது. அதன்படி, அவர்களை கண்ணியக்குறைவாக நடத்துவதோ அல்லது உடல் ரீதியாகத் துன்புறுத்துவதோ ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக கருதப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, ஜனநாயக முறையில் போராடுபவர்கள் மீது இத்தகைய தாக்குதல் நடத்தப்படுவது மனித உரிமை மீறலாகப் பார்க்கப்படுகிறது.