பொன்னியின் செல்வன் 2 பட பாடல் இசைக்கோர்வைக்கு, ஜூனியர் தாகர் சகோதரர்களுக்கு அங்கீகாரம் வழங்கியது என்பது தானாக முன்வந்து வழங்கப்பட்டதே தவிர, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழங்கப்பட்டதல்ல என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் “வீர ராஜா வீரா” இடம்பெற்றிருந்தது. இந்த பாடலின் இசைக்கோர்வை, ஜூனியர் தாகர் சகோதரர்கள் என அழைக்கப்படும், நசீர் ஃபயாஸுதின் தாகர், அவரது சகோதரர் நசீர் ஜாகிருதின் தாகர் இணைந்து உருவாக்கிய “ஷிவ் ஸ்துதி” என்ற இசை ஆல்பத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறி, இந்துஸ்தானி இசைக் கலைஞர் உஸ்தாத் ஃபயாஸ் வாசிஃபுதின் தாகர் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் காப்புரிமை மீறல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த இசைக் கோர்வைக்கான பதிப்புரிமை தன்னிடம் உள்ளதாகவும், தனது அனுமதியை பெறாமல் அதை ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்தியுள்ளதாக, மனுவில் கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம் தனி நீதிபதி, பாடலில் இடம்பெற்றுள்ள இசைக் கோர்வைக்கான அங்கீகாரத்தை வழங்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஏ.ஆர்.ரஹ்மான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது.
இதை எதிர்த்து உஸ்தாத் ஃபயாஸ் வாசிஃபுதின் தாகர் தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, குறிப்பிட்ட அந்த இசைக் கோர்வைக்கான அங்கீகாரத்தை, ஜூனியர் தாகர் சகோதரர்களுக்கு வழங்குவதாக ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பொன்னியின் செல்வன் 2 பட தயாரிப்பாளர் ஆகியோர் ஒப்புக் கொண்டனர்.
இதை ஏற்ற உச்ச நீதிமன்றம், வீரா ராஜா வீர பாடல் ஜூனியர் தாகர் சகோதரர்களின் ஷிவ் ஸ்துதி ஆல்பத்தில் ஈர்க்கப்பட்டது என ஐந்து வாரங்களில் அனைத்து சமூக வலைதளங்களிலும், ஓடிடி தளங்களிலும் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நர்மதா சம்பத் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த உத்தரவில், உச்ச நீதிமன்றம் தலையிடவும் இல்லை; வழக்கின் தகுதி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணையின் போது, சுமூக தீர்வு காணும்படி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதன் அடிப்படையில் மட்டுமே, இசைக் கோர்வைக்கான அங்கீகாரத்தை வழங்க ஒப்புக்கொண்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இசைக்கோர்வைக்கு அங்கீகாரம் வழங்கியது என்பது தானாக முன்வந்து வழங்கப்பட்டதே தவிர, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழங்கப்பட்டதல்ல எனவும், இசைக்கோர்வையின் உரிமை, பதிப்புரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் டெல்லி உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில், திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இசைக் கோர்வையை இயற்றியது யார்? அதன் உண்மைத்தன்மை மற்றும் காப்புரிமை மீறலா? என்பது குறித்த கேள்விகளுக்கு இன்னும் விடை காணப்படவில்லை என்றும், இதற்கு சட்டப்படி, நீதிமன்றத்தில் தீர்வு காணப்படும் என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் தன் விளக்க அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.