மாற்றுப் பணி நியமன மனப்பான்மையை ஊக்குவித்தால், கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களின் தேவைகள் ஒருபோதும் கருத்தில் கொள்ளப்படாது என தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, அப்படி பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய சுகாதாரத் துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மருத்துவமனையில் செவிலியர்களாக பணிபுரிந்த மெலன்ஷியா, செல்வகுமாரி உட்பட 7 பேர் மருத்துவக் கல்வி இயக்குனரின் உத்தரவின்படி, 2014 மற்றும் 2016ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மதுரை அரசு மருத்துவமனையில் டெபுடேஷன் எனப்படும் மாற்றுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதேபோல், மேலும் 9 பேர் பணிபுரிந்தனர். இவர்களின் மாற்றுப்பணி உத்தரவை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் கடந்த ஆண்டு (2025) நவம்பர் 25ல் ரத்து செய்தார்.
இதனடிப்படையில் மெலன்ஷியா, செல்வகுமாரி உள்ளிட்ட 8 பேர் மற்றும் இதர 9 பேரை விடுவித்து அவர்கள் முதலில் பணிபுரிந்த இடங்களுக்கு அனுப்ப மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் உத்தரவிட்டார். இதை ரத்து செய்து மதுரை அரசு மருத்துவமனை காலிப் பணியிடங்களில் தங்களை தொடர அனுமதிக்க உத்தரவிடக் கோரி, மெலன்ஷியா, செல்வகுமாரி உள்ளிட்ட 8 பேர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, வெவ்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்த செவிலியர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் மாற்றுப்பணியில் 12 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்ற அனுமதித்தது ஆச்சரியமடைய வைக்கிறது என்றும் கூறியுள்ளார். நகர வாழ்க்கையின் வசதிகள், சிறந்த கல்வி வாய்ப்புகள் காரணமாக அனைவரும் நகரத்தில் தங்க விரும்புவது உண்மை தான், ஆனால் கிராமப்புற மக்களின் தேவைகளும் கவனிக்கப்பட வேண்டும் என்பதை மனதில் கொள்ளவேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.
மருத்துவர்கள் கிராமப்புறங்களைவிட நகரங்களில் நல்ல வருவாய் ஈட்டும் மருத்துவப் பணியில் ஈடுபட வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்பதால் அனைவரும் நகர மருத்துவமனைகளில் பணிபுரிய தயாராக உள்ளனர் என குறிப்பிட்டுள்ள நீதிபதி புகழேந்தி, இந்த மாற்றுப் பணி நியமன மனப்பான்மையை ஊக்குவித்தால், கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களின் தேவைகள் ஒருபோதும் கருத்தில் கொள்ளப்படாமல் போய்விடும் என கூறியுள்ளார். நம் தவறுகளை ஏற்றுக்கொண்டு, துறையை சீர்திருத்தம் செய்யும் தைரியம் நமக்கு இருக்க வேண்டும் என தெளிவுபடுத்தி உள்ளார்.
இந்த வழக்கில், மாற்றுப்பணியிலுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்பான விபரங்களை தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை செயலர் பிப்ரவரி 20ஆம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.