பஞ்சாயத்து தேர்தல் முன்விரோதம் காரணமாக கோவில் திருவிழாவில் நடந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கில் 21 பேர் விடுதலை செய்யப்பட்ட மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த உயர் நீதிமன்றம், அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் பாஸ்கர் என்பவருக்கும், கிருஷ்ணவேணி என்பவருக்கும் ஊராட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தநிலையில், மாரியம்மன் கோவில் திருவிழாவில் தகராறு முற்றியதில் கடந்த 2013ஆம் ஆண்டு பாஸ்கர் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கிளியனூர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து, பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கிருஷ்ணவேணி, மதன்ராஜ், மதன்குமார், ராணி உள்ளிட்ட 23 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த திண்டிவனம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் 23 பேரையும் விடுதலை செய்து கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி தீர்ப்பளித்தது. கொலைக்கான ஆயுதங்கள் பறிமுதல் முறையாக இல்லை மேலும் நேரடி சாட்சிகள் விசாரணையில் முரண்பாடு உள்ளது எனக் கூறி விடுதலை செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து காவல் துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்படாத நிலையில், கொலை செய்யப்பட்ட பாஸ்கரின் மனைவி அமுதா சென்னை உயர் நீதிமன்றத்தில் 2019 ஆம் ஆண்டில் மேல்முறையீடு செய்திருந்தார். குற்றம்சாட்டப்பட்ட 23 பேரில் 2 பேர் இறந்துவிட்ட இறந்துவிட்ட நிலையில்,மேல்முறையீடு வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சுரேஷ், நேரில் பார்த்த சாட்சிகள் தெளிவாக உள்ளது என்றும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் முறையாக பறிமுதல் செய்யப்பட்டது என்றும், கீழமை நீதிமன்றத்தில் நேரடி சாட்சிகள் உரிய முறையில் நிரூபிக்கப்பட்டனர் என்றும் வாதிட்டார். எனவே 21 பேர் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து, தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 21 பேரையும் விடுதலை செய்து திண்டிவனம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர். அதனடிப்படையில், அவர்கள் அனைவரையும் குற்றவாளிகள் என அறிவித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், 21 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.
இதையடுத்து குற்றவாளிகள் தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதை ஏற்று, தங்களது தீர்ப்பை 90 நாட்களுக்கு நிறுத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.