நகராட்சி நிர்வாக துறையில் நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை கொடுத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழக டிஜிபி-க்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என ஆதிநாராயணன் மற்றும் அதிமுக எம்.பி. ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில், வேறொரு வழக்கு விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை டிஜிபி-க்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அவற்றின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசுத் தரப்பில், அமலாக்கத் துறையின் கடிதம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இன்று (பிப்ரவரி 20) பிறப்பித்துள்ள தீர்ப்பில், நகராட்சி நிர்வாக துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது என்பதால், அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
அமலாக்கத் துறையே போதுமான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதால் ஆரம்பகட்ட விசாரணை நடத்த தேவையில்லை எனவும், அமலாக்க துறை அளித்த கடிதங்களில் போதுமான ஆதாரங்கள் உள்ளதால் வழக்குப்பதிவு செய்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக எம்.பி. இன்பதுரை தாக்கல் செய்த வழக்கில் உத்தரவிட்ட நீதிபதிகள், ஆதிநாராயணன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.
WP(MD) No. 34197 of 2025
K. Athinarayanan Vs State rep by the Additional Chief Secretary to Government
W.P.Crl No.74 of 2026
I.S.Inbadurai Vs State of Tamil Nadu rep.by its Secretary to Government
Judgement Link : https://mhc.tn.gov.in/judis/index.php/casestatus/viewpdf/1313129