போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதை கண்டித்து பாஜக இளைஞரணி சார்பில் சென்னையில் நடத்தவுள்ள போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
சென்னையில் போதைப் பொருள் புழக்கம் மற்றும் அதுதொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவதை கண்டித்து பாஜக இளைஞரணி சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் சாலையில் பிப்ரவரி 21 ஆம் தேதி மாலை 3 மணி முதல் 6.30 மணி வரை போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஏறத்தாழ 1500 பேர் வரை பங்கேற்க உள்ள இந்த போராட்டத்திற்கு அனுமதி கோரி பிப்ரவரி 12ஆம் தேதி அளிக்கப்பட்ட மனு மீது காவல்துறை எந்த பதிலும் அளிக்கவில்லை என்பதால் போராட்டத்திற்கு அனுமதி வழங்கவும், போராட்டத்தில் ஈடுப்படுபவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடக் கோரி பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தலைவர் டாக்டர் எஸ்.ஜி.சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதிஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில், பாஜக இளைஞரணி நடத்தவுள்ள போரட்டத்திற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாக விளக்கமளித்தனர்.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், கோரிக்கை நிறைவேற்றப்பட்டுவிட்டதால், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.