மருத்துவக் காரணங்களுக்காக அரசு ஊழியர் தன் பணியை ராஜினாமா செய்யும்போதே பணிக்காலத்தை இழந்துவிடுவார் என்பதால், அவருக்கு ஓய்வூதியம் பெறத் தகுதியில்லை என சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்த அரசு ஊழியர்கள் இருவர், தங்களை விருப்ப ஓய்வு பெற்றவர்களாகக் கருதி, ஓய்வூதியம் வழங்க, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட கோரி வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
பணியை ராஜினாமா செய்த அரசு ஊழியருக்கு ஓய்வூதியம் பெற தகுதி உள்ளதா? இல்லையா? என்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், இரு வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது.
இதனால் இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், டி.பரத சக்கரவர்த்தி மற்றும் சி.குமரப்பன் அடங்கிய மூன்று நீதிபதிகளை கொண்ட முழு அமர்வு, பணி விதிகளில் ஓய்வு, விருப்ப ஓய்வு, கட்டாய ஓய்வு, ராஜினாமா ஆகிய சொற்றொடர்கள் வெவ்வேறு பொருள்களை உணர்த்துகின்றன என தெரிவித்துள்ளனர்.
தமிழக ஓய்வூதிய விதிகளில், உடல் அல்லது மன பலவீனம் போன்ற மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் ராஜினாமா செய்பவருக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்க வகை செய்கிறது என்றும், மற்ற மருத்துவக் காரணங்களைக் கூறி, பணியை ராஜினாமா செய்தால், முந்தைய பணிக்காலத்தை இழந்து விடுவதால் ஓய்வூதியப் பலன்களைக் கோர முடியாது என தெளிவுபடுத்தியுள்ளது.