தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்க கூடாது என அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கும்படி, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூரைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்.விஸ்வநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில், பொது அரசியல் எதிரியை வீழ்த்துவதற்காக, சுயநல நோக்கில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன் கூட்டணி அமைப்பது, ஜனநாயகத்துக்கு விரோதமானது என்பதால், தேர்தலுக்கு முன் கூட்டணி அமைப்பதை தடை செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.
தேர்தலுக்கு முந்தைய கூட்டணி, மக்கள் நலனை பற்றி அக்கறை கொள்வதில்லை என்றும், தேர்தல் வெற்றிக்கு பின், மக்கள் தீர்ப்பை இரண்டாம்பட்சமாக கருதி, கட்சிகள் அணி மாறுவதால், ஆட்சியில் நிலையற்ற தன்மை ஏற்பட்டு விடுகிறது என்று சாடியுள்ளார். இதன்காரணமாக ஆட்சி கவிழ்ந்து விடுகிறது என கூறி, 1970 ம் ஆண்டு ஜனதா கட்சி அரசு கவிழ்ந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் அனைத்து கட்சிகளும் தனித்தனியே போட்டியிட வேண்டும் எனவும், தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்க கூடாது எனவும் அறிவுறுத்தல்கள் வழங்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.
அதேபோல தேர்தல் அறிவிப்புக்கு முன் பெரிய கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதால், அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் பிரச்சாரம் செய்ய முடியாத நிலை உள்ளது எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் துவங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், வேட்புமனுக்கள் பரிசீலனை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பிறகு, 13 நாட்கள் தான் பிரச்சாரத்துக்கு அவகாசம் வழங்கப்படுவதால், அந்த குறுகிய காலக்கெடுவுக்குள் சிறிய கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்களால் அவர்களது சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சமமற்ற நிலையை நீக்க, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பிறகே பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் பிறப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.