ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட புகாரில், மத்திய புலனாய்வுத் துறை (CBI) தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையைச் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரகசியமாகச் சமர்ப்பித்துள்ளது.
வழக்கின் பின்னணி
திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாகப் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைச் சேர்த்துள்ளார்.
மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டது குறித்து மத்திய புலனாய்வுத் துறை (CBI) விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
சீலிடப்பட்ட கவரில் சிபிஐ அறிக்கை
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, நவாஸ் கனி மீதான புகார்கள் குறித்துத் தரவுகளைச் சேகரித்து அறிக்கை அளிக்கச் சிபிஐ-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், இன்று தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ அதிகாரிகள் தாங்கள் சேகரித்த ரகசியத் தகவல்கள் அடங்கிய அறிக்கையைச் சீலிடப்பட்ட கவரில் (Sealed Cover) நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
ஆவணங்களைப் பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு
சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, நீதிபதிகள் சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களை உயர் நீதிமன்றப் பதிவுத்துறை மிகவும் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். அடுத்த விசாரணையின் போது இந்த ஆவணங்களை மீண்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
அடுத்தகட்ட விசாரணை எப்போது?
சிபிஐ சமர்ப்பித்துள்ள ரகசிய அறிக்கையைப் பரிசீலித்துத் தீர்மானிப்பதற்காக, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூன் 15-ம் தேதிக்கு தலைமை நீதிபதி அமர்வு தள்ளிவைத்தது.
தேர்தல் முடிவுகள் மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு இடையே, ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக சிபிஐ ரகசிய அறிக்கை தாக்கல் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.