பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கீகாரம் மற்றும் ‘மாம்பழம்’ சின்னம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று (மார்ச் 23, 2026) மிக முக்கியமான மற்றும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
வழக்கின் பின்னணி
பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் அவர்கள் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டதை இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அங்கீகரித்துள்ளது. அதன் அடிப்படையில், ‘மாம்பழம்’ சின்னத்தையும் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணிக்கு ஒதுக்கி கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆணை பிறப்பித்தது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட பல்வேறு மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பில் உறுதி
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது என்றும், கட்சி நிர்வாகம் தொடர்பான புகார்களை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவாக விசாரிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தியது. இது அன்புமணி ராமதாஸ் அவர்களின் தலைமைக்குக் கிடைத்த முதல் சட்டப்பூர்வ வெற்றியாகப் பார்க்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தெளிவுரை
இன்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பில் எவ்விதத் தவறும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டியது. மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை. மாறாக, சின்னம் தொடர்பான விவகாரங்கள் சிவில் நீதிமன்றத்தின் வரம்பிற்கு உட்பட்டது எனத் தெரிவித்தது.
தேர்தல் நெருங்குவதைக் கருத்தில் கொண்டு, சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை அடுத்த 10 நாட்களுக்குள் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. விசாரணையின் போது நீதிபதிகள், “இந்த விவகாரத்தை நிதானமாகக் கையாளுங்கள் என அறிவுறுத்தினர். இது தேவையற்ற சட்டப் போராட்டங்களைத் தவிர்த்து, ஜனநாயக முறைப்படி தீர்வுகாண வேண்டும் என்பதையே உணர்த்துகிறது.
அன்புமணி தலைமையிலேயே பாமக!
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம், தற்போதைக்கு அன்புமணி ராமதாஸ்-க்கு தேர்தல் ஆணையம் வழங்கிய அங்கீகாரமும், மாம்பழம் சின்னமும் எவ்விதத் தடையுமின்றித் தொடர்கிறது. சிவில் நீதிமன்றத்தில் முறையான ஆதாரங்களுடன் உண்மை நிலை விளக்கப்படும்போது, அன்புமணி அவர்களின் தலைமை இன்னும் வலுவாக உறுதி செய்யப்படும் என தொண்டர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.