பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு மாம்பழம் சின்னம் வழங்கியதை ரத்து செய்யக் கோரியும், தன்னைத் தலைவராக அறிவிக்கக் கோரியும் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தையே அணுக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கின் பின்னணி
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களில் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான ‘மாம்பழம்’ சின்னத்தை அன்புமணி ராமதாஸுக்கு வழங்கிய உத்தரவை ரத்து செய்து, அதனை முடக்கி வைக்க வேண்டும்.
அன்புமணி ராமதாஸைத் தலைவராக ஏற்பதற்குப் பதில், தன்னை மீண்டும் கட்சியின் தலைவராக அறிவிக்க வேண்டும் என கோரப்பாட்டிருந்தது.
சென்னை உரிமையியல் நீதிமன்றத்தின் தீர்ப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தர்மபிரபு ராமதாஸின் இரண்டு கோரிக்கைகளையும் (சின்னம் மற்றும் பதவி) நிராகரித்து, அவரது மனுக்களைத் தள்ளுபடி செய்தார். சின்னம் தொடர்பான விவகாரங்கள் மற்றும் கட்சியின் உட்பூசல்கள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கே உள்ளது. எனவே, நிவாரணம் தேடி இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு ராமதாஸ் தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக இணைக்க வேண்டும் எனப் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
மின்னல் வேகத் தீர்ப்பு
இந்த வழக்கை மூன்று நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தர்மபிரபு, வெறும் இரண்டே நாட்களில் விசாரணையை முடித்துத் தீர்ப்பு வழங்கி, சட்ட நடைமுறைகளை விரைவுபடுத்தியுள்ளார்.
ஏன் தேர்தல் ஆணையத்திற்குப் போக வேண்டும்? - விளக்கம்!
இந்தியாவில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் சின்னம் யாருக்குச் சொந்தம் (உதாரணமாக: இரட்டை இலை) என்பதில் சிக்கல் ஏற்படும்போது, தேர்தல் ஆணையம்தான் 'சின்னங்கள் ஆணை 1968'-ன் படி (Symbols Order, 1968) முடிவெடுக்க முடியும். நீதிமன்றங்கள் பொதுவாகத் தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பிற்குள் வரும் இத்தகைய விவகாரங்களில் நேரடியாகத் தலையிடாது. அதனடிப்படையிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.