மதுரை எஸ்.எஸ்.காலனி RSS அலுவலகத்தில் கன்றுக்குட்டி தலை வீசப்பட்ட வழக்கில், காவல்துறையினருக்கு எதிராக மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்துள்ளது. போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னனி
கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, சிறப்பு காவல் படையைச் சேர்ந்த 6 காவலர்கள் தங்களை சட்டவிரோதக் காவலில் வைத்து துன்புறுத்தியதாக அல்ஹஜ், ரபீக்ராஜா உள்ளிட்ட 4 பேர் புகார் அளித்திருந்தனர். இதனை விசாரித்த மனித உரிமை ஆணையம், 2021-ல் காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், தலா 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு
நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் கலைமதி அமர்வு முக்கிய காரணங்களை குறிப்பிட்டனர்.
- சட்ட விதிமுறை: ஒரு விவகாரம் தொடர்பாக குற்றவியல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, அதனை மாநில மனித உரிமை ஆணையம் விசாரிக்க இயலாது என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
- ஆதாரங்கள் இன்மை: மனுதாரர்களான 6 காவலர்களும் ‘வைகை’ குழுவில் இருந்தவர்கள் என்பதும், அவர்கள் புகார்தாரர்களை கைது செய்து எஸ்.எஸ்.காலனி போலீசாரிடம் ஒப்படைத்த பிறகு அவர்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.
- மனித உரிமை மீறல்: காவலர்கள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், ஆணையத்தின் உத்தரவை முழுமையாக ரத்து செய்தனர்.
இருப்பினும், தற்போதைய நீதிமன்ற விசாரணையின் இறுதியில் ஒருவேளை காவல் சித்திரவதை உறுதியானால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். 13 ஆண்டுகால இந்த சட்டப் போராட்டத்தில் காவலர்களுக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி, காவல்துறை வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.