சானிட்டரி நாப்கின்கள் மற்றும் குழந்தைகளுக்கான டயப்பர்களில் பயன்படுத்தப்படும் நச்சு ரசாயனங்களைத் தடை செய்யக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மத்திய சுகாதாரம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சகங்கள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்களின் உடல்நலம் சார்ந்த இந்த விவகாரத்தில் முறையான விதிகளை உருவாக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வழக்கின் பின்னணி
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ். சுபத்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் டெல்லியைச் சேர்ந்த ‘டாக்ஸிக்ஸ் லிங்க்’ (Toxics Link) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், இந்தியாவில் விற்கப்படும் முன்னணி நிறுவனங்களின் சானிட்டரி நாப்கின்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அபாயகரமான ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாப்கின் மற்றும் டயப்பர்களில் என்னென்ன மூலப்பொருட்கள் (Ingredients) பயன்படுத்தப்படுகின்றன என்பதை நிறுவனங்கள் கட்டாயமாகப் பாக்கெட்டுகளில் குறிப்பிட வேண்டும் என விதிகளை உருவாக்க வேண்டும் என கோரியுள்ளார்.
நாடாளுமன்றக் கேள்வியும் கவலையும்
மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தப்படும் இந்த நச்சு ரசாயனங்கள் பெண்களின் உடலுக்குள் நுழைந்து நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, முற்றிலும் நச்சுத்தன்மையற்ற பொருட்களை மட்டுமே பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும், இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் கேள்வி எழுப்பியதையும், அதற்கு மத்திய இணையமைச்சர் அனுப்ரியா படேல் அளித்த பதிலையும் மனுதாரர் தனது வழக்கில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தலைமை நீதிபதி அமர்வின் உத்தரவு
இந்த மனுவைத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, ஜவுளித் துறை அமைச்சகங்கள் அடுத்த நான்கு வாரங்களுக்குள் விரிவான பதிலளிக்க வேண்டும். நச்சு ரசாயனங்களைத் தடை செய்வது மற்றும் தரக் கட்டுப்பாடுகளை நிர்ணயிப்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சானிட்டரி நாப்கின்களில் உள்ள ஆபத்து என்ன?
சானிட்டரி நாப்கின்கள் வெண்மையாக இருக்கவும், அதிக ஈரம் உறிஞ்சவும் பல நிறுவனங்கள் 'டயாக்சின்' (Dioxin) மற்றும் 'தாலேட்டுகள்' (Phthalates) போன்ற ரசாயனங்களைப் பயன்படுத்துகின்றன. இவை ஹார்மோன் குறைபாடுகள் முதல் புற்றுநோய் வரை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இதற்காகவே 'ஆர்கானிக்' அல்லது துணியால் ஆன நாப்கின்களைப் பயன்படுத்தப் பரிந்துரைகள் அதிகரித்து வருகின்றன.