தனக்கு எதிரான இரண்டு குற்ற வழக்குகளைச் சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்றக் கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுக்கள் மீது, காவல்துறை தனது கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது.
வழக்கின் விபரம்
சென்னை சைதாப்பேட்டை மற்றும் ஆதம்பாக்கம் காவல் நிலையங்களில் பதியப்பட்டுள்ள இரண்டு வழக்குகள் குறித்துக் காவல்துறை விளக்கியுள்ளது:
- வழக்கு 1: சைதாப்பேட்டை கிளப் உரிமையாளர் ஹரிச்சந்திரன் அளித்த புகாரில், கிளப்பின் பெயரை சிதைக்காமல் இருக்க சவுக்கு சங்கர் முதலில் ₹2 லட்சமும், பின்னர் ₹10 லட்சமும் மிரட்டி கேட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் G-Pay மூலம் ₹94,000 பரிமாற்றம் செய்யப்பட்ட ஆதாரங்கள் உள்ளதாகப் போலீஸ் தரப்பு கூறுகிறது.
- வழக்கு 2 : தயாரிப்பாளர் பி. மகேஷ் என்பவர் அளித்த புகாரில், தனது திரைப்படம் போதைப்பொருள் பணத்தில் எடுக்கப்பட்டதாக தவறான தகவல் பரப்பிய சவுக்கு சங்கர், அதனைத் தவிர்க்க ₹10 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
“அவர் எங்கே?”
நீதிபதி எம். நிர்மல் குமார் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் அரசு வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ் ஆஜராகி மனுதாரர் (சவுக்கு சங்கர்) தற்போது தலைமறைவாக உள்ளார். அவர் ஒரு தலைமறைவு குற்றவாளி. இந்த வழக்குகளில் ஏற்கனவே காவல்துறை விரிவான விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை (Charge Sheet) தாக்கல் செய்துவிட்டது. எனவே, இப்போது இந்த மனுக்களை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என வாதிட்டார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
சவுக்கு சங்கர் தனது மனுவில், ஆளுங்கட்சியின் அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் சென்னை காவல் ஆணையர் ஏ. அருண் அவர்கள் என் மீது கொண்டுள்ள தனிப்பட்ட அதிருப்தி காரணமாகவே இந்தப் பொய் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. எனது சமூக மற்றும் பத்திரிகை பணிகளை தடுப்பதற்காகவே இத்தகைய திட்டமிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என விளக்கமளித்திருந்தார்.
விசாரணை ஒத்திவைப்பு
சவுக்கு சங்கர் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஆஜராகக் கால அவகாசம் கோரியதை அடுத்து, இந்த மனுக்கள் மீதான விசாரணையை நீதிபதி ஏப்ரல் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். சவுக்கு சங்கர் தற்போது எங்கு இருக்கிறார் என்பது மர்மமாக உள்ள நிலையில், காவல்துறையின் இந்த “தலைமறைவு” அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைமறைவு குற்றவாளி' (Proclaimed Offender) என்றால் என்ன?
ஒருவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டும், அவர் நீதிமன்றத்திலோ அல்லது காவல்துறையிடமோ ஆஜராகாமல் தப்பி ஓடினால், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் (CrPC) கீழ் அவர் ‘தலைமறைவு குற்றவாளி’ என அறிவிக்கப்படலாம். இதன் மூலம் அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்யச் சட்டத்தில் இடமுண்டு.