சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி-யை நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மார்ச் 5ஆம் தேதி பணி ஓய்வுபெறுவதை அடுத்து, அந்த பதவிக்கு கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி என்பவரை சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

மத்திய அரசு இந்த பரிந்துரையை ஏற்கும்பட்சத்தில், குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்கும். அதனை ஏற்று நியமனம் செய்யும்பட்சத்தில், புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவி ஏற்றுக் கொள்வார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து 1992ஆம் ஆண்டு முதல் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில்புரிந்து வந்தார்.

கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை வருமான வரித் துறை, வங்கி மற்றும் மத்திய அரசு துறைகளில் வழக்கறிஞராக பணியாற்றிய நிலையில், 2016ஆம் ஆண்டு மத்திய பிரதேச உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு, 2018ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்,
கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேரள உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை, சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் தற்போது பரிந்துரை செய்துள்ளது.