ஆளுநர் ஆர்,என்,ரவி, பாஜக-வை சேர்ந்த நடிகை குஷ்பு உள்ளிட்டோரை ஆபாசமாக பேசிய வழக்கில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூரில் கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அப்போதைய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தமிழக ஆளுநர் ஆர்,என்,ரவி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் குறித்து, அருவருக்கத்தக்க, ஆபாச வார்த்தைகளால் பேசியாக கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த, சென்னை எழும்பூர் 10வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து பிப்ரவரி 13 ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆதாரங்களை, சாட்சியங்களை முறையாக பரிசீலிக்காமல் விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளதாகவும், அரசின் உரிய அனுமதி இல்லாமல் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட தனி நபர்கள் எவரும் வழக்கு தாக்கல் செய்யாத நிலையில் காவல்துறை பதிவு செய்த இந்த வழக்கில் விதிக்கப்பட்டுள்ள தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் மேல்முறையீட்டு மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை விசாரித்த ஆறாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பாண்டியராஜன், திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.