காவல்துறை அதிகாரிகளுக்கு நிர்வாக நடுவர் அதிகாரங்களை வழங்கும் வகையிலான தமிழக அரசின் புதிய அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம், “ஏற்கனவே தடை இருந்தும் மீண்டும் இதேபோன்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது எப்படி?” என கேள்வி எழுப்பியுள்ளது.
வழக்கின் பின்னணி
மதுரையைச் சேர்ந்த நல்லதம்பி என்பவர் தாக்கல் செய்த மனுவில் தமிழக உள்துறைச் செயலாளர் 2025-ஆம் ஆண்டு ஒரு அரசாணையைப் பிறப்பித்துள்ளார். இதன் மூலம் துணை காவல் ஆணையர்களுக்கு (DCP) நிர்வாக நடுவர் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பிணைப் பத்திர விதிமீறலுக்காக (Bond violation) ஒருவருக்குத் தண்டனை வழங்கும் அதிகாரம் என்பது முற்றிலும் நீதித்துறையைச் (Judiciary) சார்ந்தது. அதனைத் துணைக் காவல் ஆணையர்களுக்கு வழங்குவது சட்டவிரோதமானது என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகள் எழுப்பிய சரமாரி கேள்விகள்
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என். சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு, தமிழக அரசின் செயல்பாட்டைக் கடுமையாக விமர்சித்தது: ஏற்கனவே இது போன்ற ஒரு அரசாணைக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அப்படி இருக்கும்போது, அந்தத் தடையை மீறி மீண்டும் ஒரு அரசாணையை எப்படிப் பிறப்பிக்க முடிந்தது?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தண்டனை வழங்கும் அதிகாரம் என்பது நீதித்துறையின் தனிப்பட்ட அதிகாரம். காவல்துறையினருக்கு இத்தகைய அதிகாரத்தை வழங்க வேண்டிய அவசியம் என்ன?” என நீதிபதிகள் வினவினர்.
நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு
வழக்கை ஆய்வு செய்த நீதிபதிகள் காவல்துறை அதிகாரிகளுக்கு நிர்வாக நடுவர் அதிகாரங்களை வழங்கும் அந்த அரசாணைக்கு உடனடியாக இடைக்காலத் தடை விதித்தனர். இது தொடர்பாகத் தமிழக உள்துறைச் செயலாளர் நேரில் அல்லது விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
'நிர்வாக நடுவர்' (Executive Magistrate) அதிகாரம் ஏன் சர்ச்சைக்குரியது?
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி (CrPC/BNSS), பொது அமைதியை நிலைநாட்ட Bond எழுதி வாங்கும் அதிகாரம் போலீசாருக்கு உண்டு. ஆனால், அந்தப் பத்திரத்தை ஒருவர் மீறினால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கும் அதிகாரம் ஒரு நடுவரிடம் (Magistrate) தான் இருக்க வேண்டும்.
அந்த அதிகாரம் போலீஸ் அதிகாரிக்கே வழங்கப்பட்டால், புகாரளிப்பவரும் அவரே, தீர்ப்பு வழங்குபவரும் அவரே என்ற நிலை உருவாகும். இது "இயற்கை நீதிக்கு" (Natural Justice) எதிரானது என்பதால் நீதிமன்றம் இதனைத் தடுத்துள்ளது.