திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அதிகாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களின் விசாரணை நாளை நடைபெறவுள்ளது.
வழக்கின் பின்னணி
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை எனக் கூறி, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன. அந்த உத்தரவுகளில் உள்ள சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக அதிகாரிகள் தரப்பில் இந்த மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தின் கேள்வி
இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் ஏன் இத்தனை மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஒவ்வொரு முறை விசாரணையின் போதும் புதிய புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதால், அதற்கு எதிராக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், புதிதாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் இணைத்து விசாரிக்கக் கோரப்பட்டது.
நாளைக்கு ஒத்திவைப்பு
அரசு தரப்பில் ஆஜராக வேண்டிய மூத்த வழக்கறிஞர் வர கால அவகாசம் கோரப்பட்டது. அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று, வழக்கின் விசாரணையை நாளைக்கு (மார்ச் 17) ஒத்திவைத்து நீதிபதிகள் ஆணையிட்டனர்.
நாளை நடைபெறும் விசாரணையில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விரிவான வாதங்கள் முன்வைக்கப்பட உள்ளன.