ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி கிராமத்தில் 15 மீனவ குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி முன்பு நேரில் ஆஜராகித் தங்களது குமுறல்களைத் தெரிவித்தனர்.
வழக்கின் பின்னணி
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தை அடுத்த திருப்பாலைக்குடியை சேர்ந்த பிரபு என்பவர் தாக்கல் செய்த மனுவில் எங்கள் வீட்டு அருகில் உள்ள முஸ்லிம் ஜமாத்துக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமிக்க முயன்றனர். அது ஜமாத்துக்கு சொந்தமான நிலம் என நாங்கள் உண்மை பேசினோம். இதனால் ஆத்திரமடைந்த கிராம நிர்வாகிகள், எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர். எங்களுடன் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது எனத் தடை விதித்ததோடு, எங்களுக்கு ஆதரவாகப் பேசியவர்களையும் சேர்த்து மொத்தம் 15 மீனவ குடும்பங்களை கடந்த ஒரு மாதமாக ஒதுக்கி வைத்துள்ளனர் என தெரிவித்திருந்தார்.
நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான 15 குடும்பங்கள்
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு மனுதாரர் பிரபு உள்ளிட்ட 15 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நேரில் ஆஜரானார்கள்.
வாதம் மற்றும் எதிர்வாதம்
விசாரணையின் போது இருதரப்புக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. மனுதாரர் உள்ளிட்டோர் கிராமத்தில் மத ரீதியான மோதல்களை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர் என எதிர் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
நீதிபதி இது குறித்துக் கேட்டபோது, “நாங்கள் நடுநிலையாகவே செயல்படுகிறோம்; எங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை” எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
இருதரப்பு விளக்கங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி விக்டோரியா கௌரி குறிப்பிட்ட குடும்பத்தினர் மீது அபராதம் விதிக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து எதிர்த்தரப்பினர் விளக்கம் அளிக்க வேண்டும். புகாருக்குள்ளான எதிர்த்தரப்பினர் அனைவரும் வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. (SP) முறையாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தார்.
ஒத்திவைப்பு
மீனவ குடும்பங்களை அடிமைப்படுத்தி வைப்பது சட்டவிரோதம் என மனுதாரர் வாதிட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு வரும் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.