திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி கோரித் தொடரப்பட்ட பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, மனுதாரருக்கு ₹50,000 அபராதம் விதித்ததுடன், “நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்” எனச் சாடியுள்ளது.
மனுதாரரின் கோரிக்கை என்ன
மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனுவில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இந்துக்கள் தீபம் ஏற்றி வழிபட அதிகாரிகள் அனுமதி மறுக்கின்றனர். ஆனால், ரம்ஜான் அன்று இஸ்லாமியர்கள் மலை மேலே சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது பாரபட்சமானது என்பதால், இந்துக்களும் மலை மீது சென்று தீபம் ஏற்ற அனுமதி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
நீதிமன்றத்தின் கிடுக்கிப்பிடி கேள்விகள்
இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்திற்கு வேறு வேலை இல்லையா?: “திருப்பரங்குன்றத்தைத் தவிர வேறு பிரச்சனையே இல்லையா? ஒரே விவகாரம் குறித்து எத்தனை மனுக்களைத்தான் தாக்கல் செய்வீர்கள்?” என நீதிபதிகள் வினவினர்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுக்க வேண்டுமென்றால், மனுதாரர் முதலில் ₹10 லட்சத்தை ஏதேனும் ஒரு கோவில் நிதியில் வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும், என அதிரடியாகக் கூறினர். சிலர் இதுபோன்ற வழக்குகளைத் தாக்கல் செய்வதையே வேலையாகக் கொண்டு, அதன் மூலம் அரசியல் லாபம் அடைய முயல்வதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
மத்திய மற்றும் மாநில அரசு வழக்கறிஞர்களின் வாதம்
மனுதாரரின் இத்தகைய செயல்களால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. வழக்கறிஞர் கட்டணம் எனப் பல லட்சங்கள் செலவிடப்படுகிறது. எனவே இவருக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
ஏற்கனவே இது போன்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. விளம்பரத்திற்காகவே மனுதாரர் மீண்டும் மீண்டும் நீதிமன்றத்திற்கு வருகிறார் என மாநில அரசும் வாதிட்டது.
அபராதம் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவு
ஆரம்பத்தில் ₹5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர். பின்னர் மனுதாரர் தரப்பு வழக்கறிஞரின் வேண்டுகோளை ஏற்று, அது ₹50,000 ஆகக் குறைக்கப்பட்டது.
நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்
ஊடகங்களில் பெயர் வர வேண்டும் என்ற நோக்கிலேயே மனுதாரர் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறார். இனி இது போன்ற தேவையற்ற பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்ய மாட்டேன் என மனுதாரர் நீதிமன்றத்தில் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அப்படித் தாக்கல் செய்யும் பட்சத்தில் மட்டுமே, விதிக்கப்பட்ட அபராதத் தொகையைத் திரும்பப் பெறுவது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்கும் எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
பொதுநல வழக்கு என்ற பெயரில் விளம்பரத்திற்காகத் தொடரப்படும் வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.