திருப்பரங்குன்றம் மலைப்பகுதியை முழுமையாக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மத்திய தொல்லியல் துறை இணைந்து மலையை அளவீடு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கு பின்னணி
மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதையும் அதன் வரலாற்று முக்கியத்துவம் கருதி தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தேன். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து புதிய மனு அளிக்க கோரியதுடன், அதனை அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், எனது மனுவின் மீது அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
மத்திய தொல்லியல் துறையின் விளக்கம்
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் எடுப்பது குறித்துப் பரிசீலிக்க, முதலில் மலையை முழுமையாக அளவீடு செய்ய வேண்டியது அவசியம். மத்திய தொல்லியல் துறை இந்த அளவீட்டுப் பணியைச் செய்யத் தயாராக உள்ளது. ஆனால், இதற்குத் தேவையான ஒத்துழைப்பை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கவில்லை என தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியரை ஒரு எதிர்மனுதாரராக தானாக முன்வந்து சேர்த்தனர். மதுரை மாவட்ட ஆட்சியர், மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து திருப்பரங்குன்றம் மலையை முறையாக அளவீடு செய்ய வேண்டும். இந்த அளவீட்டுப் பணிக்கு வருவாய்த்துறையினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்க ஆட்சியர் உத்தரவிட வேண்டும். இந்த அளவீட்டுப் பணிகள் அனைத்தையும் வரும் மே மாதத்திற்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விசாரணை ஒத்திவைப்பு
அளவீட்டுப் பணிகளை முடிக்கக் கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தனர். திருப்பரங்குன்றம் மலையின் வரலாற்று சின்னங்களை பாதுகாக்க எடுக்கப்படும் இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.