தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கி அரசு புதிய அரசாணை பிறப்பித்துள்ளது. இந்தத் தகவல் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
மதுரை மொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த நந்தினி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் துறையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியராகப் பணியாற்றி வருவதாகவும், அரசு விதிமுறைப்படி (அரசாணை 91), பிரசவத்திற்காக எனக்கு 270 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், எனக்கு அந்த விடுப்பு வழங்கப்படாததால், அரசாணைப்படி விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
தனி நீதிபதியின் உத்தரவும் அரசின் மேல்முறையீடும்
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த தனி நீதிபதி, செவிலியர் நந்தினிக்கு 270 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அரசு சமர்ப்பித்த புதிய அரசாணை
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு, 26 வாரங்கள் (182 நாட்கள்) ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் சார்பில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் முடிவு
அரசு தரப்பில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டு, ஒப்பந்த பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முக்கியத்துவம்
இந்த அரசாணையின் மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.