அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கான அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக் கோரி தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க மூன்று வார காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
கரூரில் தவெக நடத்திய நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி ரோடு ஷோக்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு ஜனவரி 5-ஆம் தேதி வெளியிட்டது.
இந்த விதிகள் அரசியல் கட்சிகளின் செயல்பாட்டை முடக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் வழக்கு தொடர்ந்தார்
தவெக முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் விதியால், பதிவு செய்யப்பட்ட புதிய கட்சிகள் பாதிக்கப்படுகின்றன. வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ள நிபந்தனைகள் பின்பற்ற முடியாத வகையில் கடினமாக உள்ளன. இது கட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெறுவதற்கு தடையாக உள்ளது என குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அரசின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் அரசியல் கட்சிகள் மீது திணிக்கப்படுகின்றன. தவெக அளித்த பரிந்துரைகள் எதையும் அரசு பரிசீலிக்கவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தின் உத்தரவு
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு குறித்து விரிவான பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை என அரசு தரப்பில் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழக அரசு பதிலளிக்க 3 வார கால அவகாசம் வழங்கி விசாரணையைத் தள்ளிவைத்தனர்.
ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் என்றால் என்ன?
பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு சில விதிகளை வகுக்கும். ஆனால், அந்த விதிகள் ஒரு குறிப்பிட்ட தரப்பிற்கு சாதகமாகவோ அல்லது ஜனநாயக ரீதியிலான அரசியல் செயல்பாடுகளை தடுக்கும் வகையிலோ இருக்க கூடாது என்பதே இந்த வழக்கின் சாரம்சமாகும்.