பழுதான லேப்டாப்புக்கு பதிலாக புதிய லேப்டாப்பை கொடுக்க வேண்டுமென ஆப்பிள் நிறுவனத்தின் டீலருக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மண்ணடியைச் சேர்ந்த எம்.அப்துல் ரஹ்மான் என்பவர், தன் உறவினருக்கு பரிசளிப்பதற்காக, தி.நகரில் உள்ள சர்வதேச புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பிளானெட் பிரிமியம் (iPlanet Premium Reseller Consolidated Private) டீலரிடம் 67,900 ரூபாய் கொடுத்து ஆப்பிள் லேப்டாப் வாங்கியுள்ளார்.
லேப்டாப்பை வாங்கியபோதே சார்ஜ் போட்டிருக்கும் நிலையில் மட்டுமே லேப்டாப் செய்தது குறித்து கேட்டபோது, முழு சார்ஜ் ஆனவுடன் வேலை செய்யும் என்ற உத்தரவாதத்தை நம்பி அப்துல் ரகுமான் வாங்கி, உறவினருக்கு பரிசளித்த பிறகும் ஆன் ஆகாததால் ஆப்பிள் நிறுவன டீலரிடம் புகார் அளித்துள்ளார்.
வேறு புதிய லேப்டாப் தருவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட சில மணிநேரத்தில், பேட்டரியை மட்டுமே மாற்றமுடியும் என முரண்டுபிடித்தது குறித்து, காவல்துறையில் அப்துல் ரஹ்மான் புகார் அளித்தார். அது பலனளிக்காத நிலையில், புதிய லேப்டாப் மற்றும் மன உளைச்சலுக்கு 25,000 ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டுமென வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதற்கு பொறுப்பற்ற முறையில் பதிலளிக்கப்பட்ட நிலையில், சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். புதிய லேப்டாப்பும், 5 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த புகார் ஆணையத்தில் விசாரணைக்கு வந்தபோது, புகார்தாரர் தரப்பில் ஆஜரான ஏ. கே. எம். சம்சுநிஹார் மோசடியாக பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் ஆப்பிள் நிறுவனத்தின் டீலர் செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நுகர்வோர் ஆணையம், அப்துல் ரஹ்மானுக்கு பழுதான ஆப்பிள் லேப்டாப்புக்கு மாற்றாக புதிய ஆப்பிள் லேப்டாப்பையும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 5,000 ரூபாய் 8 வாரத்தில் இழப்பீடும் வழங்க வேண்டுமென, சென்னை தி.நகரில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பிளானெட் பிரிமியம் டீலருக்கு உத்தரவிட்டுள்ளது.