கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக தெருவை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள விநாயகர் கோயிலை அகற்றுவது தொடர்பாக, மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு மதுரை உயர் நீதிமன்ற அமர்வு ஆணையிட்டுள்ளது.
மனுதாரரின் புகார்
கடையநல்லூரை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், இந்திரா நகர் பகுதியில் கண்ணன் என்பவர் பொதுத் தெருவை ஆக்கிரமித்து விநாயகர் கோயில் கட்டியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இது குறித்துக் கேள்வி கேட்பவர்களை அவர் தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்குவதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
மேலும், அப்பகுதி மக்களின் தேவைக்காக கட்டப்பட்ட சிறிய குடிநீர் தொட்டியைப் பயன்படுத்த விடாமல் அவர் தடுத்து வருவதாகவும், இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அந்த ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்
நீதிமன்றத்தின் விசாரணை மற்றும் ஆணை
இந்த மனுவை நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுவில் கூறப்பட்டுள்ள புகார்கள் குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மனுதாரரின் மனுவை முறையாக பரிசீலித்து, ஆக்கிரமிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதன் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.