மடப்புரம் காவலாளி அஜித்குமார் காவல் மரணம் அடைந்த வழக்கில், 8-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு குறித்து பதிலளிக்குமாறு CBI-க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி மற்றும் CBI விசாரணை
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக முதலில் தனிப்படை போலீசார் 6 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு CBI விசாரணைக்கு மாற்றப்பட்டது. CBI தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் DSP மற்றும் ஆய்வாளர் ரமேஷ்குமார் உள்ளிட்ட 4 பேர் புதிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, பிப்ரவரி 25-ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் ஆஜரான ரமேஷ்குமார், ஜாமீன் பத்திரங்களை தாக்கல் செய்தார்.
கைது அச்சமும் முன்ஜாமின் கோரிக்கையும்
இந்த வழக்கு மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட 4 பேரையும் விசாரணை முடியும் வரை சிறையில் அடைக்க வேண்டும் என நீதித்துறை நடுவர் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் தான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் ரமேஷ்குமார் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்தார்.
நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவு
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல். விக்டோரியா கௌரி முன்னிலையில், CBI தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகைதீன் பாஷா, ஆய்வாளருக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், இது குறித்துப் பதிலளிக்கக் கால அவகாசம் கோரினார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனு தொடர்பாக CBI தரப்பில் வரும் மார்ச் 12-ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அதுவரை, இந்த வழக்கின் விசாரணையை தலைமை குற்றவியல் நடுவர் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் நீதிபதி ஆணையிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.