கொடி கம்பங்கள், பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் அகற்றுவது தொடர்பாக பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டும் தொடர்ச்சியாக வழக்குகள் தாக்கல் ஆவது ஏன் என பதிலளிக்கும்படி 13 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சாலிகிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 13 தென் மாவட்டங்களில் முறையான அனுமதியின்றி கொடிக்கம்பங்கள், பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன என்றும், அரசு புறம்போக்கு இடங்கள், மாநில நெடுஞ்சாலை, கிராம சாலைகள் மற்றும் பொது இடங்களில் அரசியல் மற்றும் சாதிய பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டு, போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன என்றும் கூறியுள்ளார். இதனால் தேவையற்ற மோதல்கள் ஏற்படும்நிலை உள்ளதால், தமிழ்நாடு உள்ளாட்சி விதிகளின்படி முறையான அனுமதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
எனவே, 13 தென் மாவட்டங்களில் முறையாக அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் மற்றும் சாதிய அமைப்புகளின் கொடிக்கம்பங்கள், பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் உள்ளிட்டவை தொடர்பாக விசாரணை நடத்தவும், முறையான அனுமதி பெறாதவற்றை உடனடியாக அகற்றவும் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர், கட்சி கொடி கம்பங்கள், பிளக்ஸ் பேனர்கள் அகற்றுவது தொடர்பாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டும், ஏன் தொடர்ச்சியாக இதுபோன்ற வழக்குகள் தாக்கலாகின்றன என கேள்வி எழுப்பினர். அதன்பின்னர், வழக்கு தொடர்பாக மதுரை, திண்டுக்கல், தேனி, நெல்லை உள்ளிட்ட 13 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.