தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் நிர்வாகிகளின் பதவிக்காலம் வரும் மே மாதம் நிறைவடைவதையடுத்து, 2026 முதல் 2029ஆம் ஆண்டு வரையிலான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தயாரிப்பாளர் கவுன்சில் உறுப்பினர்களான சீனிவாசன், ரஞ்சித் குமார் உள்ளிட்ட ஐந்து பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், கவுன்சில் சட்ட விதிமுறைகளை மீறி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பி.தனபால் முன் விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பாளர் கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்திரன், சட்ட விதிகளை பின்பற்றியே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பாக நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம் உள்ளிட்ட கூட்டங்களில் மனுதாரர்கள் கலந்து கொண்டதாகவும், அப்போது எந்த எதிர்ப்பும் அவர்கள் தெரிவிக்கவில்லை என்றும், ஏற்கனவே இந்த கவுன்சில் தேர்தலை நடத்தியவர் என்ற முறையில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன், இம்முறையும் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மனுதாரர்களில் நான்கு பேர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும், அவற்றை தேர்தல் அதிகாரி ஏற்று கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி தனபால், தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடும்போது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில் தேர்தல் நடைமுறை துவங்கிய பிறகு தடை கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் காரணமாக பிப்ரவரி 22ஆம் தேதி தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு தேர்தல் நடத்த எந்த தடையும் இல்லை என்பது தெளிவாகிறது.